34,000 கோடி டாலர் ஏற்றுமதி இலக்கு: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

34,000 கோடி டாலர் ஏற்றுமதி இலக்கு: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
Updated on
1 min read

நடப்பு நிதி ஆண்டில் 34,000 கோடி டாலர் ஏற்றுமதி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி 4.7 சதவீதம் அதிகரித்து 31,440 கோடி டாலரை எட்டியது என்றும் நடப்பு நிதி ஆண்டுக்கு இந்த இலக்கு 34 ஆயிரம் கோடி டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவித்தார்.

நாட்டின் ஏற்றுமதியில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் ஜப்பானின் பங்களிப்பு 1.84 சதவீதமாகவும், அமெரிக்காவின் பங்களிப்பு 13.75 சதவீதமாகவும் உள்ளது என்று தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபரில் ஏற்றுமதி 5.04 சதவீத அளவுக்கு சரிந்தது. இன்ஜினீயரிங் பொருள்கள், பார்மா, ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி துறையில் ஏற்பட்ட சரிவே இதற்குக் காரணமாகும்.

அமெரிக்கா, யுஏஇ, சவூதி அரேபியா, ஹாங்காங், சீனா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரேசில், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

97,673 கிலோ தங்கம் இறக்குமதி

செப்டம்பர் மாதத்தில் மிக அதிகபட்சமாக 97,673 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாக மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவித்தார். முந்தைய மாதத்தில் இறக்குமதி 50,213 கிலோவாக இருந்தது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் முறையே 43,207 கிலோ, 52,612 கிலோ, 77,681 கிலோ மற்றும் 45,269 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உருக்கு உற்பத்தி 24% அதிகரிப்பு

நாட்டின் உருக்கு உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுரங்கம் மற்றும் கனிம அமைச்ச கத்தின் இணையமைச்சர் விஷ்ண தேவ் சாய் தெரிவித்தார். 2009-10-ம் நிதி ஆண்டில் உற்பத்தி 658 கோடி டன்னாக இருந்தது. இது தற்போது 784 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என்றார்.

கடந்த நிதி ஆண்டில் செயில் ரூ. 1,512 கோடியும், ராஷ்ட்ரிய நிகாம் இஸ்பட் லிமிடெட் ரூ. 9,890 கோடியும் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஏற்கெனவே உள்ள சுரங்கம் மற்றும் கனிம கட்டுப்பாடு தொடர்பான வரைவு மசோதா இப்போது இணைய தளத்தில் கருத்துக் கேட்புக்காக போடப் பட்டுள்ளதாகவும் இந்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in