Published : 30 Nov 2014 11:18 AM
Last Updated : 30 Nov 2014 11:18 AM

ரிசர்வ் வங்கியை சமாதானப்படுத்தி வட்டி குறைப்பு செய்ய வேண்டும்: முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியை சமாதானப்படுத்தி வட்டி குறைப்பு செய்வதற்கு தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி குறைந்துவிட்டது. வளர்ச்சியை அதிகரிக்க, ஊக்குவிக்க வட்டிக் குறைப்பு அவசியம் என்று சிதம்பரம் தெரிவித்தார். மேலும் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 5.3 சதவீதமாக வந்திருப்பது யாருக்கும் எந்தவிதமான அதிர்ச்சி யையும் அளிக்கவில்லை என்றார்.

முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சிக்கு நாங்கள்தான் காரணம் என்று மத்திய அரசு அறிவித்தது. பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாக அப்போதே நான் எச்சரித்தேன். கடன் வளர்ச்சி குறைவு, உற்பத்தித் துறையில் மந்த நிலைமை, புதிய முதலீடுகள் இல்லை, திட்டங்கள் முழுமை அடையாமல் இருப்பது என பல காரணங்கள் இருக்கிறது என்றார் சிதம்பரம்.

மத்திய அரசு இவற்றில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை என்றார். மக்களவையில் தன்னிடம் இருக்கும் பெரும்பான்மையான பலத்தை வைத்தும் செய்யவில்லை, நிர்வாக திறன் இருக்கும் உயர் அதிகாரிகளை வைத்தும் இவற்றை மத்திய அரசு செய்யவில்லை என்றார்.

பங்குச்சந்தை வேகமாக உயர்ந்து வந்ததில் மத்திய அரசு கவனம் இழந்துவிட்டது. இந்த பிரச்சினைகள் 2012-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டது.

இதன் காரணமாக மின்சாரம், நிலக்கரி, விவசாயம் மற்றும் திட்டங்களை விரைவாக செயல் படுத்துவதில் முந்தைய அரசு கவனம் செலுத்தியது.

இதனை தற்போதைய அரசு முதல் ஆறு மாதங்களில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றிருக்க வேண்டும். அதனை செய்யாததால் இரண்டாம் காலாண்டு ஜிடிபி முடிவுகள் மோசமாக வந்தி ருக்கின்றன என்று சிதம்பரம் தெரிவித்தார்.

இருந்தாலும் இன்னும் காலம் இருக்கிறது. வரும் மாதங்களில் இவற்றை செய்து நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரபடுத்தி, வளர்ச்சியை அதிகப்படுத்தலாம் என்றார்.

உடனடியாக மத்திய அரசு தேங்கி இருக்கும் திட்டங்களை விரைவாக முடுக்கிவிடும் பட்சத்தில் புதிய முதலீடுகள் வரும். இது நாட்டின் பொருளாதாரத்தில் எதிரொலிக்கும். என்றார். மேலும் பெரிய முதலீடுகளை அடையாளம் கண்டு செயல்படுத்த வேண்டும்.

மேலும் தன்னிடம் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி வட்டி குறைப்பு செய்ய ரிசர்வ் வங்கியை சம்மதிக்க வேண்டும்.

இதன் மூலம் மேலும் வட்டி குறையும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக் கையாளர்களுக்கு ஏற்படுத்து வதற்கு மத்திய அரசு இதனை செய்ய வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.

வளர்ச்சி 5.4 முதல் 5.9 சதவீதம்

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 5.4 சதவீதம் முதல் 5.9 சதவீதமாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இரண்டாம் காலாண்டு நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கிறது. இது எதிர்பார்த்த நிலைமையில்தான் வந்திருக்கிறது என்றார். ஏப்ரல் ஜூன் இடையிலான காலாண்டில் 5.7 சதவீதமாக வளர்ச்சி இருந்தது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கிறது. இதுவும் எதிர்பார்க்கப்பட்டதுதான். மேலும் பொருளாதார ஆய்வறிக்கையில் 5.4 முதல் 5.9 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று ஏற்கெனவே கணித்ததை ஒப்பிட்டிருந்தது நிதி அமைச்சகம்.

இரண்டாம் காலாண்டு வளர்ச்சி குறைந்ததற்கு விவசாயம் மற்றும் உற்பத்தி துறையில் இருக்கும் மந்த நிலைமைதான் காரணம் என்றும், விவசாயத் துறையின் மந்த நிலைமைக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததுதான் காரணம் என்றும் நிதி அமைச்சகத்தின் அறிவிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x