

நாட்டின் பணவீக்கம் குறைந்து வருவது குறித்து உடனடியாக மகிழ்ச்சியில் கொண்டாடி மகிழ வேண்டாம் என்று நிறுவனங்களை ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஹெச்.ஆர். கான் எச்சரித்துள்ளார். மும்பையில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரிகள் (சிஎப்ஓ) மாநாட்டில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
பொருள்களின் விலை ஒரே சீராக கிடைப்பதில் இன்னமும் சில சிக்கல்கள் நிலவுகின்றன. விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும். இந்த பிரச்சினையை முற்றிலுமாக தீர்க்க வேண்டியுள்ளது. பொருள்களின் உற்பத்திச் செலவு, கூலி, உணவுப் பொருள் விலை, புரதச் சத்து நிறைந்த பொருள் உள்ளிட்டவை கிராமப் பகுதிகளில் பெருமளவு பணவீக்கத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் பொருளாதார மீட்சி இன்னமும் முழுமை பெறவில்லை. இதுதவிர, பணவீக்கத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் புவிசார் அரசியல் காரணிகளும் அடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் பணவீக்கம் குறைந்ததை உடனடியாகக் கொண்டாட முடியாது. அதிலும் குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளில் பணவீக்கத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் சில்லறை பணவீக்கத்தை 8 சதவீதத்துக்குள்ளும் ஆண்டு இறுதியில் 6 சதவீதத்துக்குள்ளும் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித் துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் பணவீக்கம் 6.47 சதவீத அளழுக்குக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஆனால் இதுகுறித்து பேசிய கான், கிராமப்பகுதிகளில் பால் விலை உயர்ந்துள்ளதை குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதாகவும், இது மேலும் வளர்வதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன என்றும் குறிப்பிட்ட அவர், இருப்பினும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது என்றார்.
அந்நிய முதலீடுகள்
இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்திலும் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் என்றார். அந்நிய முதலீடுகளை ஏற்பதற்கு முன்பாக போதுமான அளவு ஆராய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 2010-ம் ஆண்டில் 2,100 கோடி டாலராக இருந்த அந்நிய முதலீடு தற்போது 5,200 கோடி டாலராக அதிகரித்துள்ளது.