

சிறு, குறு நிறுவனங்களுக்கான விதிமுறைகள் தளர்த்த மத்திய சிறு,குறு அமைச்சகம் முடிவு செய்து இது தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி நஷ்டமடைந்த நிறுவனங்கள் அதிலிருந்து வெளியேறவும், நலிவடைந்த நிறுவனங்களை மறு சீரமைக்கவும் புதிய விதிமுறைகள் வழிவகை செய்துள்ளன.
புதிய உத்தேச விதிமுறைகள் குறித்து ஆலோசனைகளை அமைச்சகம் எதிர்நோக்கியுள்ளது. இத்துறையினரிடமிருந்து வரப் பெறும் ஆலோசனைகளில் அடிப்படையில் புதிய கொள்கை வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு நிறுவனங்களுக்கு இரு வழியில் பயனளிக்கும் நோக்கங்களை உள்ளடக்கியதாக புதிய பரிந்துரை அமைந்துள்ளது. நலிவடைந்த நிறுவனங்களை சீரமைப்பது அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கு உத்தேச கொள்கையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன..
மறு சீரமைப்பு விதியின்மூலம் நலிவைச் சந்திக்கும் சிறு குறு நிறுவனங்கள் அது தொடர்பான தகவலை தெரிவிப்பதன் மூலம் நிதி உதவி பெற்று அதை சீரமைப்பதற்கான வழிவகைகள் புதிய விதிமுறையில் உள்ளன.
அதேபோல தொடர்ந்து நடத்துவதற்கு சாத்தியமில்லை எனக் கருதப்படும் நிறுவனங்களை மூடிவிட்டு வெளியேறுவதற்கான வழிகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் ஒப்புகைதாரர்கள் பரஸ்பரம் ஒப்புக் கொண்டு புதிய நிர்வாகம் பொறுப்பேற்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.