4 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது கச்சா எண்ணெய் விலை

4 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது கச்சா எண்ணெய் விலை
Updated on
1 min read

அதிக உற்பத்தி, டாலர் பலமடைந்து வருவது ஆகிய காரணங்களால் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று சரிந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இடையே 81.83 டாலருக்கு சரிந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு இவ்வளவு அதிகமாக சரிவது இப்போதுதான்.

ஆனால் ஐரோப்பிய சந்தைகள் செயல்பட ஆரம்பித்தவுடன் கச்சா எண்ணெய் சிறிதளவு உயர்ந்தது. எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடியாது என்று குவைத் நாட்டின் எண்ணெய் அமைச்சர் அலி அல் ஓமியார் கடந்த மாதம் வியன்னாவில் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 30 சதவீத அளவுக்கு கச்சா எண்ணெய் சரிந்தது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்தால் மட்டுமே சரிந்து வரும் விலையினை கட்டுப்படுத்த முடியும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் இருக்கும் 12 அமைச்சர்கள் வரும் நவம்பர் 27-ம் தேதி வியான்னாவில் கூடி எண்ணெய் நிலவரத்தை பற்றி விவாதிக்க இருக்கிறார்கள். இதில் உற்பத்தியை குறைக்கலாமா அடுத்த வருடத்தின் உற்பத்தி இலக்கு ஆகியவற்றை பற்றியும் விவாதிக்க இருக்கிறார்கள்.

இதற்கிடையே வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதினால் மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பும் பலமடைந்து வருகிறது. ஆறு நாட்டு நாணயங்களுக்கு எதிராக இருக்கும் டாலர் இண்டெக்ஸ் நான்கு வருட உச்சத்தை நெருங்கி வருகிறது. மேலும் ஜேபி மார்கன் சேஸ் நிறுவனம் 2015-ம் ஆண்டுக்கான கச்சா எண்ணெயின் இலக்கு விலையை ஒரு பேரல் 115 டாலரிருந்து 82 டாலருக்கு குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாத இறுதிக்குள் எண்ணெய் உற்பத்தி நாடுகளுள் சரியான ஒரு முடிவை எடுக்காவிட்டால், டிசம்பர் மாதத்தில் ஒரு பேரல் 70 டாலர் வரை கூட சரிய வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஓ.பி.இ.சி. யில் 12 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். உலகத்தின் தேவையில் 40 சதவீதத்தை இந்த நாடுகள் உற்பத்தி செய்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in