

சீனாவில் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான அலிபாபா நேற்று வெளியிட்ட ஒரு நாள் ஷாப்பிங் சலுகை விற்பனையில் ஒரு மணி நேரத்தில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் உலகிலேயே ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் அலிபாபா முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.
ஆண்டுதோறும் நவம்பர் 11-ம் தேதியன்று மகத்தான தள்ளுபடியில் பொருள்களை விற்பனை செய்வதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு 580 கோடி டாலர் அளவுக்கு பொருள்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே அளவுக்கு வர்த்தகமானது. ஆனால் இதை விட அதிக அளவுக்கு விற்பனை இருக்கும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் தினம், கறுப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கள் ஆகிய நாள்களில் அதிகபட்சமாக 370 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஆனால் 2009-ம் ஆண்டிலிருந்து அலிபாபா நடத்தும் வர்த்தகத்தில் இதைக் காட்டிலும் அதிக தொகைக்கு பொருள்கள் விற்பனையாகியுள்ளன.