

நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது சவாலான விஷயம் என்றாலும், அந்த குறிப்பிட்ட அளவுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று சிட்டி குழும அறிக்கை தெரிவிக்கிறது.
எரிபொருள் விஷயமாக எடுத்து வரும் சீர்திருத்தங்கள், சிக்கன நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக நிதிப்பற்றாக்குறையை 4.1 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நிதிப் பற்றாக்குறை இலக்கில் 82.6 சதவீதத்தை தொட்டுவிட்டது. செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி 4.38 லட்சம் கோடி ரூபாய் அளவில் நிதிப்பற்றாக்குறை இருக்கிறது.
ஒட்டுமொத்த நிதி ஆண்டுக்கு (2014-15) நிதிப்பற்றாக்குறை 5.31 லட்சம் கோடி அல்லது ஜிடிபியில் 4.1 சதவீதமாக இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இதை அடைவதற்குத் திட்டம் சாராத செலவுகளில் 10 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன் மூலம் 40,000 கோடி ரூபாய் செலவுகள் குறைக்கப்படும். அதாவது ஜிடிபியில் 0.3 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிட்டி குழும அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மேலும் முதல் வகுப்பு விமானச் சேவை தடை செய்திருப்பது, ஐந்து நட்சத்திர ஓட்டலில் கருத் தரங்குகள் வைப்பது, புதிய நியமனங்களை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கையும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
நடுத்தர காலத்தில் மானியங் களை குறைப்பது, சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகம் செய்வது உள்ளிட்ட நடவடிகைகள் காரணமாக 2017-ம் நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதமாக குறைக்க முடியும் என்றும் சிட்டி குழுமம் தெரிவித்திருக்கிறது.
2017-ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.