Published : 29 Aug 2017 11:29 AM
Last Updated : 29 Aug 2017 11:29 AM

தொழில் முன்னோடிகள்: ஸ்டீவ் ஜாப்ஸ் (1955 - 2011)

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு புள்ளி. வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போதுதான் இந்தப் புள்ளிகளுக்குள் இருக்கும் தொடர்பு புரியும். இந்தப் புள்ளிகள் எப்படியாவது சந்திக்கும் என்று நாம் நம்ப வேண்டும். இதற்குக் காரணம் உள்ளுணர்வு, விதி, வாழ்க்கை, கர்மா என்று பல காரணங்களைச் சொல்லலாம். நான் இதை நம்புகிறேன்.

- ஸ்டீவ் ஜாப்ஸ்

ன்றைய தொழில்நுட்ப உலகின் வழிகாட்டிகள், அமேசானின் ஜெஃப் பிஸோஸ், கூகிளின் லாரி பேஜ், செர்கி பிரின், ஃபேஸ்புக்கின் மார்க் ஜூகர்பர்க். இவர்கள் அனைவருமே டிஜிட்டல் கடவுள் என்று ஒருவரைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். அவர், ஸ்டீவ் ஜாப்ஸ்.

1954. அமெரிக்க விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் சிரிய நாட்டு அப்துல் ஃபட்டா ஜான் ஜண்டாலி படித்துக்கொண்டிருந்தார். ஜோயன் கரோல் சியபல் என்னும் சக மாணவியோடு காதல் பிறந்தது. காதல் கருவானது. 1955. மகன் ஸ்டீவ் பிறந்தான். விரும்பாது வந்த குழந்தை. பழைய கார்கள் வாங்கி விற்கும் பால் ஜாப்ஸ், அவர் மனைவி கிளாரா ஆகியோருக்குத் தத்துக் கொடுத்தார்கள்.

ஜாப் தம்பதிகள் மகனைப் பாசத்தோடு வளர்த்தார்கள். ஸ்டீவுக்கு ஆறு வயது. பிறப்பு ரகசியத்தை அவனிடம் சொன்னார்கள். முதலில் உடைந்துபோனான். ஆனால், ஜாப்ஸ் அப்பா – கிளாரா அம்மா அன்பில், இந்தக் காயத்தின் வீரியம் குறைந்தது.

ஸ்டீவ் படிப்பில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. பள்ளிக்கூடத்தில் முக்கிய வேலை விஷமம் செய்வதுதான். நான்காம் வகுப்பில் இமோஜின் என்பவர் ஆசிரியை. பிறர் கவனத்தை ஈர்க்கத்தான் குறும்பு செய்கிறான் என்று கண்டுபிடித்தார். அவன் முதல் மார்க் வாங்கினால் ஐந்து டாலர் பரிசு தருவதாக ஊக்கமூட்டினார். ஸ்டீவுக்கு சவால்கள் அல்வா சாப்பிடுவது மாதிரி. அதிக மார்க் வாங்கினான். பின்னாட்களில் சொன்னார்,“இமோஜின் டீச்சர் இருந்திருக்காவிட்டால் நான் ஜெயிலுக்குத்தான் போயிருப்பேன்.“

1960 - களில் எலெக்ட்ரானிக்ஸ் புரட்சி வந்தது. அதுவும், ஸ்டீவ் வசித்த கலிபோர்னியா மாநிலத்தில்தான் இந்தப் புயல் மையம் கொண்டிருந்தது. ரேடியோ, தொலைக்காட்சி ஆகியவை எல்லா வீடுகளிலும் இடம் பிடிக்கத் தொடங்கின. ஸ்டீவுக்கு இவற்றில் எக்கச்சக்க ஈடுபாடு. அப்பா இந்த ஆர்வத்துக்குத் தீனி போட்டார். ரேடியோ, டி.வி. ஆகியவற்றை அசெம்பிள் செய்வதற்கான பாகங்களை வாங்கிக் கொடுத்தார். பூர்வ ஜென்ம பந்தம்போல் ஸ்டீவ் எலெக்ட்ரானிக்ஸை சிக்கெனப் பிடித்துக்கொண்டான்.

ஸ்டீவிடம் வயதுக்கு மீறிய சாமர்த்தியம் மட்டும் இருக்கவில்லை. வயதை மிஞ்சிய அடாவடித்தனங்களும் இருந்தன. பள்ளிச் சிறுவனாக இருக்கும்போதே, மார்யுவானா, எல்.எஸ்.டி ஆகிய போதைப் பொருட்களை உபயோகித்தான்.

1969. ஸ்டீவ் தனிமை விரும்பி. ஆனால், எப்படியோ, அவனுக்கும் வாஸ்னியாக் என்னும் சக மாணவனுக்குமிடையே நட்பு வந்தது, வளர்ந்தது. அடுத்த மூன்று வருடங்களில், வாஸ்னியாக் ப்ளூ பாக்ஸ் என்னும் தொலைபேசிக் கருவி கண்டுபிடித்தார். மார்க்கெட்டிங்கை ஸ்டீவ் பார்த்துக்கொண்டார். நூறு கருவிகள் விற்றார். வாஸ்னியாக்கின் கண்டுபிடிப்புத் திறமை + ஸ்டீவின் மார்க்கெட்டிங் = பிசினஸ் வெற்றி என்று இருவரும் உணர்ந்தார்கள். கை கோர்த்துத் தொழில் தொடங்க முடிவு செய்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் ஸ்டீவின் பள்ளிப் படிப்பு முடிந்தது. ரீட் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் ஸ்டீவுக்குப் படிப்பு கசந்தது. நான் ஏன் பிறந்தேன்? என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்கிற தத்துவக் கேள்விகள் அவர் மனத்தை அல்லாட வைத்தன. சைவ உணவுக்கு மாறினார். செருப்பு, ஷூ போடுவதை நிறுத்தினார். எங்கு போனாலும், வெறும் கால்தான். படிப்பை விட்டார். கையில் கால் காசு கிடையாது. நண்பர்களின் அறையில் தரையில் படுத்துத் தூங்கினார். குப்பை பொறுக்கும் பையன்கள்போல் காலி கோக கோலா பாட்டில்களைப் பொறுக்கி எடுப்பார். கடையில் 20 பாட்டில்கள் கொடுத்தால் ஒரு டாலர் கிடைக்கும். கையில் காசு தேறினால் சாப்பாடு. பல நாட்கள் ஆப்பிள் மட்டும்தான் எல்லா நேரமும். இல்லாவிட்டால், ஏழு மைல் தூரத்தில் இருந்த ஹரே கிருஷ்ணா கோவிலுக்கு நடந்துபோவார். அங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிடுவார். இப்படிப் பதினெட்டு மாதங்களை ஓட்டிவிட்டு வீடு திரும்பினார்.

வீட்டில் சும்மா இருந்தபடி தண்டச் சோறு சாப்பிட மனம் உறுத்தியது. அட்டாரி என்னும் வீடியோகேம்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். மறுபடியும் ஆன்மீகச் சிந்தனைகள். இமாலயம் போகவேண்டும், நீம் கரோலி பாபா என்னும் சாமியாரைச் சந்திக்கவேண்டும். சொற்பக் காசோடு இந்தியா வந்தார். கொல்கொத்தா, ஹரித்வார் எனப் பல சுற்றல்கள். டப்பா ஹோட்டல்களின் சாப்பாடும், தண்ணீரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஒரே வாரத்தில் உடல் எடை 64 கிலோவிலிருந்து 55 கிலோவாகக் குறைந்தது. ஆனால், நீம் கரோலி பாபாவைப் பார்த்தாகவேண்டும் என்னும் வெறித்தனமான ஆசை. ரெயில், பஸ் பிடித்து ஆசிரமம் இருக்கும் நைனிடால் போனார். ஆசிரமம் காலி. பாபா அங்கே இல்லை.

ஸ்டீவ் நைனிடாலில் ஒரு அறை வாடகைக்கு எடுத்தார். உள்ளூர்க் குடும்பம் ஒன்று அவருக்கு தினமும் சைவ உணவு சமைத்துக் கொடுத்தார்கள். உடல்நிலை கணிசமாகத் தேறியது. அந்த அறையில் யோகியின் சுயசரிதை என்ற புத்தகத்தை யாரோ விட்டுவிட்டுப் போயிருந்தார்கள்.

பரம்ஹம்ஸ யோகானந்தாவின் வாழ்க்கை வரலாறு. (சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்று இது. இந்தப் புத்தகத்தில் வரும் மஹா அவதார் பாபாஜி ரஜினியின் குரு. பாபா படத்தில் ரஜினியின் குருவாக இவரைத்தான் பார்த்திருக்கிறோம்.) ஸ்டீவ் திரும்பத் திரும்ப, மனப்பாடம் செய்யும் அளவுக்கு இந்த நூலைப் படித்தார். காவி உடைக்கு மாறினார். நீண்ட ஜடாமுடி, காவி உடை, போதைக் கண்கள். அவரே தீட்சை வாங்கின சாமியார் மாதிரி இருந்தார்.

ஒரு நாள். மலை அடிவாரத்தில் ஒரு சாமியார் மதப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். பேச்சு இந்தியில். புரியாது என்று தெரிந்தும், பொழுதுபோக்குவதற்காக ஸ்டீவ் கூட்டத்தில் போய் உட்கார்ந்தார். சாமியார் ஸ்டீவ் அருகில் ஓடி வந்தார். ஹஹ்ஹா என்று அமானுஷ்யத்தனமாகச் சிரித்தார்.

“அப்பனே, நீ ஒரு குழந்தை.“

கையை இறுக்கமாகப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். மந்திரித்துவிட்ட ஆடுபோல், மறுப்போ தயக்கமோ காட்டாமல் ஸ்டீவ் அவரோடு நடந்தார். இருவரும் போன இடம் மலை உச்சி. சாமியார் தன் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்தார். ஸ்டீவின் நீண்ட, சிடுக்கெடுத்த தலையில் தண்ணீர் தெளித்தார். தலைமயிரைச் “சரக்“, “சரக்“ என்று வெட்டினார். அடுத்ததாக, அவர் தலையைக் கத்தியால் மழுங்கச் சிரைத்தார். இப்போது மறுபடியும் ஹஹ்ஹா என்று சிரித்தார்.

“அப்பனே, போய் வா.’’

ஸ்டீவ் இந்தியா வந்து ஏழு மாதங்களாகிவிட்டன. நீம் கரோலி பாபாவைப் பார்ப்பதுதான் பயணத்தின் இலக்கு. அது நிறைவேறவில்லை. ஆனால், “வந்த வேலை முடிந்துவிட்டது. இனி உன் அப்பா, அம்மாவிடம் போ’’ என்று உள்ளுணர்வு ஆணையிட்டது.

பாபாவைப் பார்க்காவிட்டாலும், ஸ்டீவ் மனத்தில் இனம் காண முடியாத திருப்தி. இந்தியப் பயணம் அவர் மனத்தில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் சொன்னார், “அமெரிக்காவில் நாம் அறிவைப் பயன்படுத்துகிறோம். இந்தியக் கிராமங்களில் அறிவைவிட உள்ளுணர்வைப் பயன்படுத்துகிறார்கள். உலகத்தின் மற்ற எல்லா மக்களையும்விட இந்தியர்களிடம் மட்டுமே உள்ளுணர்வு வளர்ச்சியடைந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அறிவைவிட மிகச் சக்தி கொண்டது உள்ளுணர்வுதான். (இந்திய அனுபவத்தால்) நான் அறிவைவிட உள்ளுணர்வை நம்பத் தொடங்கினேன்.’’

ஸ்டீவ் மறுபடியும் அட்டாரி வேலைக்குப் போகத் தொடங்கினார். மொட்டைத் தலை, காவி உடை, செருப்பில்லாக் கால். யார் எதைச் சொன்னாலும் கவலைப்படாமல், தனக்குச் சரியென்று பட்டதைச் செய்யும் அபாரத் தன்னம்பிக்கை. இந்தக் காலகட்டத்தில் பழைய நண்பர் வாஸ்னியாக் சந்திப்பு. அவர் படிப்பை முடித்துவிட்டு, அன்றைய முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஹ்யூலெட் பக்கார்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். எலெக்ட்ரானிக்ஸில் ஈடுபாடு கொண்டவர்கள், ஹோம்ப்ரூ கம்யூட்டர் கிளப் என ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். வாஸ்னியாக் இதன் அங்கத்தினர். ஸ்டீவையும் ஒரு கூட்டத்துக்கு அழைத்துப்போனார். ஸ்டீவ் வாழ்க்கையில் திருப்பு முனை.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x