Published : 08 Aug 2017 10:14 AM
Last Updated : 08 Aug 2017 10:14 AM

கூடுதல் வரியால் சொகுசு கார்களின் விலை உயர வாய்ப்பு

சொகுசு கார்களுக்கான செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்ந்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்திருக்கிறது. இதனால் எஸ்யூவி மற்றும் சொகுசு கார்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் கூடியது. அப்போது இழப்பீடு வரியை 25 சதவீதமாக உயர்ந்த பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை அடுத்து ஜிஎஸ்டி சட்டத்தில் தேவையான திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துளது. ஆனால் எப்போது முதல் இந்த வரி உயர்வை அமல்படுத்துவது என்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் முடிவெடுக்கும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கார்களின் விலை குறைந்தது. இது குறித்து ஆகஸ்ட் 5-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இழப்பீட்டு வரியை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட மற்றும் 13 நபர்களுக்குள் பயணம் செய்யும் வாகனங்களுக்கு இந்த பரிந்துரை பொருந்தும். அதேபோல ஹைபிரிட் வாகனங்களில் 1,500-க்கும் மேற்பட்ட சிசி இருக்கும் வாகனங்களுக்கும் இந்த பரிந்துரை பொருந்தும்.

சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை நிர்ணயம் செய்யும் குழு (பிட்மென்ட் கமிட்டி), ஜிஎஸ்டி-க்கு பிறகு சொகுசு கார்களின் விலை குறைந்திருப்பதை கண்டறிந்தது. ஜிஎஸ்டி-க்கு முந்தைய விலையில் இருக்க வேண்டும் என்றால் இழப்பீட்டு வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தலாம் என்று கண்டறிந்தது.

ஜிஎஸ்டிக்கு பிறகு எஸ்யூவி ரக கார்களின் விலை ரூ.1.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை குறைந்தது. அனைத்து வகையான கார்களுக்கும் 28% வரி நிர்ணயம் செய்யப்பட்டது. சொகுசு கார், எஸ்யூவி, ஹைபிரிட் வகை கார்களுக்கு இழப்பீட்டு வரியாக 15% நிர்ணயம் செய்யப்பட்டது. 4 மீட்டருக்குள் இருக்கும் சிறிய பெட்ரோல் காருக்கு (1,200 சிசி) 1% செஸ் விதிக்கப்படுகிறது. 4 மீட்டருக்குள் இருக்கும் சிறிய டீசல் காருக்கு (1500சிசி) 3% செஸ் விதிக்கப்படுகிறது. இந்த இழப்பீட்டு வரி புகையிலை, நிலக்கரி ஆகியவற்றுக்கும் விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளை சரி செய்வதற்காக இந்த இழப்பீட்டு வரி விதிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x