

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி (சியுபி) வாடிக்கையாளர்களின் வசதிக்காக செல்போன் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள தானியங்கி பட்டுவாடா மையம் (ஏடிஎம்), வங்கிக் கிளை இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளமுடியும்.
சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற வங்கியின் 110வது நிறுவன தின விழாவில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் ``ரூ பே’’ அட்டையும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த விழாவில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர். காந்தி பேசியது: திருத்தியமைக்கப்பட்ட விதிகள் காரணமாக வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் (என்பிஎப்சி) எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டில் 14,722 நிறுவனங்கள் இயங்கின. இந்த எண்ணிக்கை 12,029 ஆகக் குறைந்துள்ளது.
வங்கிகள் போன்று நிதி நடவடிக்கையில் செயல்படும் நிறுவனங்களைக் கண்டறிவது மிகுந்த சவாலான விஷயம். சிட் பண்ட் என்ற போர்வையில் செயல் படும் நிறுவனங்களைப் பற்றிய விவரம் மிகக் குறைவாகவே உள்ளது. முறையாக அனுமதி பெற்று நடைபெறுபவை சில. பதிவு செய்யப்படாமல் இயங்குபவை பல. இது தவிர, தனி நபர்களால் நடத்தப்படும் நிதி நிறுவனங்களும் உள்ளன. இத்தகைய நிறுவனங்களை, தனி நபர்களை கண்காணிப்பு அமைப்பு, காவல்துறை உள்ளிட்டவற்றின் துணையோடுதான் கண்டுபிடிக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.
புதிய விதிமுறைகளால் என்பிஎப்சி-க்களின் லாபம் சற்று குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது இத்தகைய விதிமுறைகள் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றார் காந்தி.
வங்கித் துறையின் ஸ்திரமான வளர்ச்சிக்கு கட்டுப்பாடு அவசியமாகிறது. அதேசமயம் தேவையா னவர்களுக்கு நிதி உரிய வகையில் கிடைப்பதற்குத் தேவையான அணுகுமுறையை உருவாக்க வேண்டியுள்ளது. இவையிரண்டையும் சமவிகிதத்தில் வங்கிகள் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் சி. ரங்கராஜன் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய சிட்டி யூனியன் வங்கியின் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், வங்கி தற்போது 17 மாநிலங்களில் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். வங்கியின் சமூக கடமையின் (சிஎஸ்ஆர்) ஒரு அங்கமாக கும்பகோணத்தில் 10 பள்ளிகளில் 110 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாகக் கூறினார்.