

இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளிநாட்டில் கடன் பத்திர வெளியீடு மூலம் 125 கோடி டாலரைத் திரட்டியுள்ளது.
இரண்டு கடன் பத்திர வெளியீடு மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டுள்ளது. 75 கோடி டாலர் கடன் பத்திரமானது 5 ஆண்டில் முதிர்வடையக் கூடியது. இதற்கு 205 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டில் முதிர்வடையும் வகையிலான கடன் பத்திரம் மூலம் 50 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது. இதற்கு 225 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடன் பத்திர வெளியீடு வியாழக்கிழமை இரவு நிறைவடைந்ததாக வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா, வெளிநாட்டில் கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்டிய தொகையை விட கூடுதலாக எஸ்பிஐ திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயில் இந்தியா நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை 100 கோடி டாலரை இரண்டு கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்டியிருந்தது.
இந்த கடன் பத்திர வெளியீட்டில் அமெரிக்கவாழ் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாது. எஸ்பிஐ கடன் பத்திரங்களை வாங்குவதற்கு பெருமளவிலான முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். 5 ஆண்டு கடன் பத்திரத்துக்கு 300 கோடி டாலர் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. 10 ஆண்டு கடன் பத்திரங்களை வாங்க 290 கோடி மதிப்புக்கு விண்ணப்பித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடன் பத்திரங்களை வாங்கியவர்களில் 53 சதவீதம் பேர் அமெரிக்கர்கள் அல்லாத முதலீட்டாளர்களாவர். 24 சதவீதம் பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் 23 சதவீதம் பேராவர். இந்த மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. இதனால் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி அளவு அதிகமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களான ஓவிஎல், ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி திரட்ட முடிவு செய்தன. கடந்த மாதம் பார்தி நிறுவனம் 200 கோடி டாலரை திரட்டியது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறும் முடிவை வெளியிட்டு அதை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது. இருப்பினும் உள்நாட்டில் கடனுக்கான வட்டி விகிதத்தை விட 500 புள்ளிகள் குறைவாகவே நிதி திரட்ட முடிந்துள்ளது. ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம், பவர் ஃபைனான்ஸ், ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களும் வெளிநாடுகளில் நிதி திரட்ட உத்தேசித்துள்ளன.
2012-ம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் பத்திர வெளியீடு மூலம் 1,600 கோடி டாலரைத் திரட்டின. பின்னர் அங்கும் கடனுக்கான வட்டி அதிகரித்ததைத் தொடர்ந்து பத்திர வெளியீட்டை நிறுத்தி வைத்தன.