Published : 29 Aug 2017 10:22 AM
Last Updated : 29 Aug 2017 10:22 AM

ஏழ்மையை ஒழிக்க பொருளாதார ஏற்றத் தாழ்வு குறைய வேண்டும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா கருத்து

இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க வேண்டுமெனில் ஏற்றத் தாழ்வு குறைய வேண்டும் என்று நிதி ஆலோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா கருத்து தெரிவித்துள்ளார். வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். முக்கியமாக வாய்ப்புகள் சம அளவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். மருத்துவம் மற்றும் கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் அளிக்க வேண்டியது நாட்டின் முக்கிய தேவையாக உள்ளது என்று கூறினார்.

இந்த மாதத்துடன் நிதி ஆயோக் பொறுப்பிலிருந்து வெளியேறும் பனகாரியா நிகழ் ச்சி ஒன்றில் பேசுகையில் இதனை கூறினார். அவர் மேலும் பேசியதாவது: வறுமையை ஒழிப்பது மற்றும் ஏற்றத் தாழ்வை குறைப்பது இரண்டுக்கும் இடையில் பொருளாதார ரீதியாக முரண்பாடுகள் உள்ளன. மருத்துவம் மற்றும் கல்வியில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் வேண்டும்.

இந்தியாவில் மிகச் சிறந்த பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்ட 1960-70 காலகட்டங்களில் ஏற்றத் தாழ்வுகளில் அதிக கவனம் செலுத்தி நாம் அதை போக்குவதற்கான கொள்கைகளை உருவாக்குவதில் தவறு செய்துவிட்டோம் என்று குறிப்பிட்டார். பொருளாதார ஏற்றத் தாழ்வு பல்வேறு வகைகளில் சிக்கலானது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் வறுமையை ஒழிக்க வேண்டுமெனில் பொருளாதார சமத்துவமின்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் வேண்டும்.

பணக்கார நாடுகளில் பொருளாதார சமத்துவமின்மை மிகப் பெரிய விவகாரமாக உள்ளது. இந்தியா வறுமை விகிதத்தை ஒழிக்க வேண்டுமெனில் பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒழிப்பதில் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்.

இந்த வகையில் பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகம் கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. பீகார் மாநிலத்தில் பொருளாதார சமநிலை நிலவுகிறது. இதற்கு காரணம் வறுமை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்தான் என்றார்.

நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் பேசுகையில், இந்தியாவில் 210 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன. நாட்டின் பொருளாதார சமத்துவமின்மையை ஒழிக்க வேண்டுமெனில் உடனடியாக இங்கு மாற்றங்கள் தேவைப்படுகிறது என்றார். சட்டத்தின் மூலம் சமத்துவத்தை கொண்டு வர முடியாது. கல்வி மற்றும் மருத்துவத்தில் முன்னுரிமையுடன் செயல்படும்போதுதன் இது சாத்தியம் . பாலின சமத்துவத்தை பொறுத்தவரையில் இப்போதுவரை சமத்துவத்தை எட்டுவது சாத்தியமில்லாமல் உள்ளதையும் காந்த் சுட்டிக் காட்டினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x