Published : 20 Aug 2017 01:06 PM
Last Updated : 20 Aug 2017 01:06 PM

இன்ஃபோசிஸ் பிரச்சினைக்கு நிர்வாக குழுவின் தோல்வியே காரணம்: முன்னாள் சிஎப்ஓ மோகன்தாஸ் பாய் கருத்து

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தற்போதைய பிரச்சினைக்குக் காரணம் நிர்வாக குழுவின் நிர்வாகச் செயல்பாடுகள் தோல்வியே காரணம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) மோகன் தாஸ் பாய் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மோகன்தாஸ் பாய் மேலும் கூறியதாவது: தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நடந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. நிர்வாகக் குழு தனது வேலைகளை சரிவர செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது. பங்குதாரர்கள் மற்றும் அதன் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி எழுப்பிய சில பிரச்சினைகளுக்கு நிர்வாகக் குழு சரியான விளக்கம் அளிக்கவில்லை. மேலும் நிறுவனத்தின் துணைத்தலைவர் அளித்த பேட்டியில் தலைமைச் செயல் அதிகாரியை விமர்சித்து விட்டார். விஷால் சிக்கா இலக்கை எட்டவில்லை என்று அவர் பேட்டியில் குறிப்பிட்டார். இதுவே பிரச்சினைக்கு காரணமாகிவிட்டது. இது நிர்வாக பிரச்சினையே.

யார் துணைத் தலைவராக வேண்டும் என்பதை இணைத் தலைவர் கூறமுடியாது. யார் வர வேண்டும் என்பதை பங்குதாரர்களே முடிவு செய்ய வேண்டும். நாளைக்கே பங்குதாரர்கள் சிறப்பு பொதுக்குழு கூடி துணைத் தலைவரை முடிவு செய்ய முடியும். இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்குதாரர்களுக்கான நிறுவனம். ஆனால் சிலர் அதை தங்கள் சொந்த நிறுவனமாக கருதி கொள்கிறார்கள்.

தற்போது நடக்கும் நிகழ்வுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்பை இழக்க செய்யாது. ஆனால் நிர்வாகக் குழுவின் மதிப்பு குறைந்து விடும். நிர்வாகக் குழுவுக்கு பங்குகள் ஏதும் இல்லை. ஆனால் நிறுவன பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்கள் ஒன்றுசேர்ந்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்ய வேண்டும். விஷால் சிக்காவின் செயல்பாடு குறித்து எந்த பிரச்சினையும் நாராயணமூர்த்திக்கு இல்லை. அது குறித்து நாராயணமூர்த்தி பேசியதும் இல்லை என்று மோகன்தாஸ் பாய் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x