

நாட்டின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண்(டபிள்யூ.பி.ஐ) அடிப்படையிலான பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 1.77 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 5 ஆண்டுகளில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். செப்டம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் 2.38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவு பணவீக்கம் 1.3 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு பழங்கள், காய்கறிகளின் விலை குறைந்ததே காரணமாகும். இருப்பினும் மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் விலை உயர்ந்தே காணப்பட்டது.
ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் பட்டியலை அரசு வெளியிட்டது. அதில் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை 1.3 சதவீதம் குறைந்துள்ளது. விமான எரிபொருள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை குறைந்ததும் இதற்குக் காரணமாகும். இந்த வாரத் தொடக்கத்தில் வெளியான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவாக 5.52 சதவீத அளவுக்குச் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி பொருள் குறியீட்டில் பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை. செப்டம்பரில் 2.84 சதவீதமாக இருந்த குறியீடு அக்டோபரில் 2.43 சதவீதமாகக் குறைந்திருந்தது. முதன்மைப் பொருள்களின் பணவீக்கம் செப்டம்பரில் 2.18 சதவீதமாக இருந்தது அக்டோபரில் 1.43 சதவீதமாகக் குறைந்திருந்தது.
ஒட்டுமொத்த விலைக் குறியீட்டில் சரிவு, சில்லரை வர்த்தக குறியீட்டெண் சரிவு மற்றும் ஆலை உற்பத்தி அதிகரிப்பு ஆகியன பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த அறிகுறிகளாகும். இதனால் ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள் கையில் கடனுக்கான வட்டியைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
அக்டோபர் மாதத்தில் உருளைக் கிழங்கு விலை அதிகமாகவே இருந்தது. ஆண்டுக்காண்டு விலை அடிப்படையில் உருளைக்கிழங்கு விலை 82.11% அதிகரித்திருந்தது. செப்டம்பர் மாதத்தில் 20.95 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்த பழங்களின் விலை அக்டோபரில் 19.35 சதவீத அளவுக்கே குறைந் திருந்தது. பால் விலை 11.39 சதவீதம் உயர்ந்திருந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும்பட்சத்தில் பணவீக்கம் மேலும் குறையக் கூடும். மேலும் குளிர்காலத்தில் காய்கறிகளின் விளைச்சல் அதிகரிக்குமாதலால் விலை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் நுகர்வோர் தேவை குறைவாக உள்ளது. உடனடியாக எந்தவித பண்டிகை காலங்களும் இல்லையென்பதால் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
பணவீக்கத்தை 2015-ம் ஆண்டு ஜனவரிக்குள் 8% அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை ரிசர்வ் வங்கி நிர்ணயித் துள்ளது. 2016-ம் ஆண்டில் பணவீக்கத்தை 6 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை டிசம்பர் 2-ம் தேதி வெளியிட உள்ளது.
வட்டியை குறைக்க வேண்டும்
பணவீக்கம் குறைந்துள்ள நிலையில் நீண்ட காலமாக குறைக்காமல் இருந்து வரும் கடனுக்கான வட்டி விகிதத்தை இப்போது ரிசர்வ் வங்கி கட்டாயம் குறைக்க வேண்டும் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
``பணவீக்கம் இப்போது வெகுவாகக் குறைந்துள்ளது. இப்போதைய சூழலில் அதிகரிப் பதற்கான சாத்தியங்கள் வெகு குறைவு. சந்தையில் பொருள் களின் தேவையும் குறைவாகவே உள்ளது.
நுகர்வோர் பொருள் விற்பனை தொடர்ந்து நான்கு மாதங்களாக சரிவையே சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில் வளர்ச்சியை முடுக்கிவிட அனைத்து நடவடிக் கைகளையும் கட்டாயம் எடுக்க வேண்டும்,’’ ஃபிக்கி அமைப் பின் செயலர் திதார் சிங் குறிப் பிட்டுள்ளார்.
``ஒட்டுமொத்த விலைக்குறியீட் டெண் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விலைவாசியும் அரசு எதிர் பார்த்த அளவில் கட்டுக்குள் உள்ளது. இத்தகைய சூழலில் முதலீட்டை ஈர்ப்பதற்குரிய கொள்கை மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது.
இத்தகைய சூழலில் பொருள் களின் விற்பனையை அதிகரிப் பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்,’’ என்று அசோசேம் செயலர் டி.எஸ். ரவாத் சுட்டிக் காட்டியுள்ளார்.