Published : 15 Aug 2017 10:29 am

Updated : 15 Aug 2017 10:29 am

 

Published : 15 Aug 2017 10:29 AM
Last Updated : 15 Aug 2017 10:29 AM

தொழில் முன்னோடிகள்: ஹோவர்ட் ஷுல்ஸ் (1953)

1953

ஆண்டு விற்பனை 21 பில்லியன் டாலர்கள் (சுமார் 1,40,574 கோடி ரூபாய்). இந்தியா உட்பட 75 நாடுகளில் 26,736 கடைகள்; 1,82,000 முழுநேர ஊழியர்கள். இந்தப் பிரம்மாண்ட கம்பெனி – கொச்சையாகச் சொன்னால், ஒரு காப்பிக் கடை. ஸ்டார்பக்ஸ்.

தன் 34 – ம் வயது வரை, இத்தனை பிரம்மாண்ட நிறுவனத்தை உருவாக்குவோம், 3 பில்லியன் டாலர்கள் (சுமார் 20,000 கோடி ரூபாய்) சொத்துக்கு அதிபதியாவோம் என்று ஷுல்ஸ் நினைத்தே பார்த்திருக்கமாட்டார்.

அமெரிக்க நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் பகுதியில் ஏழைகள் வசிக்கும் குடியிருப்புகள். அங்கே ஃபிரெட், எலென் தம்பதிகள். மூன்று குழந்தைகள். அப்பாவுக்கு நிரந்தர வேலை கிடையாது. தொழிற்சாலை ஊழியர், லாரி டிரைவர், டாக்சி டிரைவர் என எது கிடைக்குமோ, அந்த வேலை.

ஷூல்ஸ் வயது ஏழு. அப்பாவுக்கு விபத்து. காலில் அடிபட்டுப் படுத்த படுக்கை. சிகிச்சைக்குப் பணம் இல்லை.``கையில் காசு இல்லாததால், அப்பா தன் சுயமரியாதையை இழப்பதைப் பார்த்தேன்.” எப்படியாவது வறுமைப் படுகுழியிலிருந்து வெளியே வர வேண்டும். முடியுமா? அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை.

ஷூல்ஸ் பன்னிரெண்டு வயதில் நாளிதழ்கள், பத்திரிகைகள் விற்கத் தொடங்கினான். அடுத்தபடியாக உள்ளூர் ஹோட்டலில் எடுபிடி, தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கனமான தோல் துண்டுகளை மடித்துத் தூக்கிவைக்கும் வேலை. எப்படியாவது குடும்பத்துக்கு உதவவேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சி.

படிப்பைவிட விளையாட்டில் ஆர்வம். பரிசுகள் கிடைத்தன. இதற்கும் மேலாக, கல்லூரிப் படிப்புக்கான முழு உதவித் தொகை. கருத்துப் பரிமாற்றத் துறையில் (Communications) இளங்கலைப் பட்டம் வாங்கினான். படிப்பை முடித்தவுடன், ஜெராக்ஸ் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதி வேலை. ஊர் ஊராகப் பயணம் செய்வது, வகை வகையான மக்களைச் சந்திப்பது மிகவும் பிடித்தது. மூன்று வருடங்கள். ஹமாமாப்ளாஸ்ட் என்னும் ஸ்வீடன் நிறுவனத்தில் சேர்ந்தார். அடுக்களைக் கருவிகள் தயாரிப்பவர்கள். காப்பிப் பொடி அரைக்கும் இயந்திரங்கள் அவற்றுள் ஒன்று.

1981. ஷூல்ஸ் விற்பனையில் தொய்வு. ஆனால், சியாட்டில் நகரத்திலிருந்த ஸ்டார்பக்ஸ் என்னும் கம்பெனி மட்டும் ஏராளமான காப்பி அரைக்கும் இயந்திரங்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஏன் என்று காரணம் தெரிந்தால், மற்ற ஊர்களிலும் விற்பனையை அதிகமாக்கலாம் என்னும் நினைப்போடு சியாட்டில் போனார். அங்கே சேகரித்த விவரங்கள், சுகானுபவம், ஷூல்ஸ் வாழ்க்கையை முழுக்க முழுக்க மாற்றிய திருப்புமுனை.

1960 - களில் அமெரிக்காவில் ஒரு சிலரே காப்பி குடித்தார்கள். சுவையான காபி தயாரிப்பது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. சியாட்டில் நகரத்தில் வசித்த ஆல்ஃபிரட் பீட் என்பவர் காப்பி பிரியர். ஐரோப்பிய நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப் பயணம் செய்வார். அந்தக் காப்பி சுவையை அமெரிக்கர்களும் அனுபவிக்க வேண்டுமென்று விரும்பினார். 1966 – இல், காப்பி கொட்டையை இறக்குமதி செய்து, பதமாக வறுத்து விற்பனை செய்யத் தொடங்கினார். வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஜெர்ரி பால்ட்வின், ஜெவ் ஸேகல், கார்டன் போக்கர் என்னும் மூன்று நண்பர்கள் ஸ்டார்பக்ஸ் என்னும் பெயரில் கடை தொடங்கினார்கள். பீட் கடையில் காப்பிக்கொட்டை வாங்கிப் பொடித்துக் காப்பித்தூள் விற்பனை. அமோக வியாபாரம். அதனால்தான் ஷூல்ஸிடம் அதிக அரவை இயந்திரங்கள் வாங்கினார்கள். அவர்கள் சாம்பிளாகத் தந்த காப்பியை ஷூல்ஸ் குடித்தார். இப்படிப்பட்ட அமிர்தத்தை அவர் இதற்கு முன்னால் சுவைத்ததே கிடையாது.

இந்த பிசினஸில் சேர்ந்தேயாகவேண்டும் என்று முடிவு செய்தார். வேலை தருமாறு ஸ்டார்பக்ஸ் பங்காளி ஜெர்ரி பால்ட்வின்னை நச்சரித்தார். தொந்தரவு தாங்கமுடியாமல், மார்க்கெட்டிங் டைரக்டர் வேலை தந்தார்கள்.

ஆனால், அவருடைய அன்றைய சம்பளத்தில் பாதி தான் அவர்களால் தர முடியும். மனதுக்குப் பிடித்த வேலை. ஷூல்ஸ் சம்மதித்தார். 29 – ஆம் வயது. சியாட்டில் வந்தார்.

ஷூல்ஸுக்கு இளமை வேகம். ஸ்டார்பக்ஸ் ஏராளமான கிளைகள் திறக்கவேண்டும், மடமடவென வளரவேண்டும் என்று துடித்தார். முதலாளிகளுக்கு அத்தனை ரிஸ்க் எடுக்க பயம். காட்டுக் குதிரைக்குக் கடிவாளம் போட்டார்கள்.

1983. ஷுல்ஸ் இத்தாலியின் மிலான் நகரத்துக்குப் போனார். செல்வம் கொழிக்கும் நகரம். பிசினஸ், முதலீடு, பணப் பரிவர்த்தனை, கல்வி, ஃபேஷன், பொழுதுபோக்கு, மீடியா ஆகிய பல துறைகளில் முன்னணியில் நின்றது. பல காப்பி கஃபேக்கள். வகை வகையான, சுவை மிகு காபிகள். ஷூல்ஸ் அசந்தார். இன்னொரு விஷயத்தைக் கவனித்தார். கஃபேக்களுக்கு வந்தவர்கள் சுடச்சுடக் காப்பியைக் குடித்துவிட்டு ஓடவில்லை. ஆர அமர உட்கார்ந்து அரட்டை அடித்தார்கள். மிலான் நகரில், கஃபேக்கள் காப்பி குடிக்கும் இடங்கள் என்பது பெயருக்குத்தான்.

அவை மனம் விட்டுப் பேசும் இடங்கள், பொழுதுபோக்கு மையங்கள், கலாச்சாரச் சின்னங்கள் என்பதை உணர்ந்தார். அமெரிக்காவில் அன்று அத்தகைய இடங்களே இல்லை. மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் போன்ற துரித உணவு விடுதிகளில் மட்டுமே மக்கள் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். துரித உணவு விடுதிகளின் மையக்கொள்கை வேகம், பரபரப்பு.

இதற்கு மத்தியில் கஸ்டமர் எப்படி சாவகாசமாக உட்கார்ந்து பேச முடியும்? ஷூல்ஸ் மனம் நிறையக் கனவுகள் – அமெரிக்கா முழுக்க இத்தாலியக் கஃபேக்களின் சூழலில் ஸ்டார்பக்ஸ் கடைகள். மார்க்கெட்டிங் தலைவராக அவர். சம்பளம், போனஸ் என முதலாளிகள் அள்ளித்தருவார்கள்.

அடுத்த இரண்டு வருடங்கள். ஷூல்ஸ் தன் திட்டத்துக்குப் பட்டை தீட்டினார். இப்போது ஒரு அதிசயம். யானை ஷுல்ஸுக்கு மாலை போட்டது. அவர் கனவு கண்டுகொண்டிருந்த சாம்ராஜியத்தின் ராஜாவாக்கியது. ஸ்டார்பக்ஸ் முதலாளிகளிடம் தன் திட்டத்தை விளக்கினார். ஏனோ, இந்த பிசினஸ் ஜெயிக்கும் குதிரையாக அவர்களுக்குத் தோன்றவில்லை. தானே தொடங்க ஷூல்ஸ் முடிவெடுத்தார்.

ஆசை சரி. ஆனால், 1.7 மில்லியன் டாலர்கள் முதலீடு. அவர் கையில் அத்தனை பணமில்லை. வங்கிக் கடன் வாங்கினார். அப்புறமும் தட்டுப்பாடு. ஸ்டார்பக்ஸ் முதலாளிகள் பெருந்தன்மையோடு இந்தப் பற்றாக்குறையை ஈடு கட்டினார்கள்.

1986. சியாட்டிலில், ஈல் ஜோர்நாலே (Il Giornale) என்னும் பெயரில் ஷூல்ஸின் கடை தொடங்கியது. நாளிதழ் என்று அர்த்தம். ஏன் இந்தப் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை. அமோக வரவேற்பு. முதல் நாளே 300 கஸ்டமர்கள். குவிந்தன பாராட்டுகள். ஷூல்ஸ் கல்லாப்பெட்டியில் பணம் கொட்டியது.

1987. ஸ்டார்பக்ஸ் முதலாளிகளால் தங்கள் பிசினஸை நிர்வகிக்க முடியவில்லை. விற்க முடிவு செய்தார்கள். வந்தார் ஷூல்ஸ். விலை 4 மில்லியன் டாலர். வழக்கம்போல் கையில் பணமில்லை. கடன் வாங்கிக் கல்யாணம். ஸ்டார்பக்ஸ் கம்பெனிக்கு ஒரே முதலாளி ஷூல்ஸ்.

நினைத்ததைச் செய்யும் சுதந்திரம். ஷூல்ஸ் தன் கனவு மாளிகையின் ஒவ்வொரு செங்கல்லாக எழுப்பத் தொடங்கினார். அவர் அறிமுகம் செய்த புதுமைகள்;

பிரேஸில், கொலம்பியா, கியூபா, போர்த்துக்கல், ஸ்பெயின் , வியட்நாம் போன்ற உலகின் வகை வகையான சுவையான உயர்தரக் காப்பி வகைகள். சர்வர்கள் கிடையாது. கஸ்டமர்கள் கவுண்டரில் ஆர்டர் செய்து, அவர்கள் முன்னால் ஃபிரெஷ் காப்பி தயாரிக்கப்படும்.

கட்டுப்பாடுகளே இல்லாமல், கடை ஆட்கள் யாரும் தொந்தரவே செய்யாமல், ஒரு காபி மட்டுமே குடித்தாலும், நாள் முழுக்கக் கடையில் நேரம் செலவிடும் சுதந்திரம்.

பக்கத்தில் இருப்பவர் பேச்சு சப்தம் காதில் விழாமல், தனிமையில் சுகம் காண்பதற்கும், நெருக்கமானவர்களோடு மனம்விட்டுப் பேசுவதற்கும், அடுத்தவர் தொந்தரவு இல்லாமல் வேலை செய்வதற்கும் வசதியாக ஒவ்வொரு மேசைக்கிடையிலும் தாராளமான இடம். (இதனால், அதிகம் பேர் ஒரே நேரத்தில் உட்காரமுடியாது, விற்பனை பாதிக்கப்படும் என்று தெரிந்தும்.)

இந்தப் புதுமைகளின் பலன் – ராட்சச வளர்ச்சி. 1987-ம் ஆண்டு 17 கடைகளாக இருந்த எண்ணிக்கை, 1992-ம் ஆண்டில் 165 கடைகளாகவும், 2000-த்தில் 3,500 கடைகளாகவும், 2017-ல் 26,736 கடைகளாகவும் உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 2017. ஷூல்ஸ் சிஇஓ. பதவியை தன் சகாவிடம் ஒப்படைத்தார். தலைவராகத் தொடர்கிறார். அவர் எந்த பதவியில் இருந்தாலும், பதவிகள் அனைத்திலுமிருந்து விலகினாலும், ஸ்டார்பக்ஸ் எப்போதுமே ஷூல்ஸ் கம்பெனிதான்.

slvmoorthy@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author