Published : 25 Aug 2017 12:41 PM
Last Updated : 25 Aug 2017 12:41 PM

நிதி ஆயோக் 3 ஆண்டு செயல் திட்ட அறிக்கை வெளியீடு

பொருளாதாரத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அறிக்கையை நிதி ஆயோக் அளித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான செயல் திட்ட அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று வெளியிட்டார்.

2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையான காலத்தில் இந்தியா 8 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வறுமை ஒழிப்பு சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

திட்டம் சாரா செலவினங்களைக் குறைத்து திட்டங்களுக்கு செலவிட வேண்டிய பணிகளை முன்னுரிமைப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நகர்ப்புற மேம்பாடு, ராணுவம், ரயில்வே, சாலை வசதி உள்ளிட்டவற்றில் அதிக முதலீடு செய்யுமாறு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

நகரமயமாக்கலில் குறைந்தவிலை வீடுகள் உருவாக்குதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போக்குவரத்து வசதி உள்ளிட்டவை அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஊழலை ஒழித்து வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடருமாறும், ஆட்சிப் பணி மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைத்துள்ளது.

நீதித்துறையில் மாற்றம், மனித வளங்களை உரிய வழியில் பயன்படுத்துவது உள்ளிட்ட பரி்ந்துரைகளும் நிதி ஆயோக் 3 ஆண்டு செயல் திட்ட அறிக்கையில் அடங்கும்.

211 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று சுட்டிக் காட்டியுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x