Last Updated : 31 Aug, 2017 08:34 AM

 

Published : 31 Aug 2017 08:34 AM
Last Updated : 31 Aug 2017 08:34 AM

சொகுசு கார்களுக்கு கூடுதல் வரி: அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவைக் குழு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சொகுசு கார்களுக்கு கூடுதல் வரி (செஸ்) விதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நடுத்தர, பெரிய மற்றும் எஸ்யுவி ரக கார்களுக்கான வரி 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. கூடுதல் வரி விதிப்பதென்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடியது. அதில் எஸ்யுவி, நடுத்தர ரக கார்கள் மற்றும் சொகுசு கார்களுக்கு கூடுதல் வரி விதிப்பதென முடிவு செய்யப்பட்டது. ஜிஎஸ்டி அமலான ஜூலை 1 முதல் இத்தகைய கார்களின் விலைகள் குறைந்தன. இது குறித்து கவுன்சில் கூட்டத்தில் ஆராயப்பட்டு கூடுதல் வரி விதிப்பதென முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவை முடிவு செய்தாலும் இதற்குரிய திருத்தம் ஜிஎஸ்டி சட்டம் (மாநில அரசுக்களுக்கு வழங்கும் இழப்பீடு) 2017-ல் கொண்டு வந்தாக வேண்டும்.

ஜிஎஸ்டி விதிப்புக்கு முன்பு மோட்டார் வாகனங்களுக்கான அதிகபட்ச வரி 52 சதவீதம் முதல் 54.72 சதவீத அளவுக்கு இருந்தது. இத்துடன் கூடுதலாக 2 சதவீதம் மத்திய விற்பனை வரி, ஆக்ட்ராய் வரி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்த வரி விகிதம் 43 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது.

வரி விகிதத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வு நிலையைப் போக்கவும், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கவும் வசதியாக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முந்தைய வரி விதிப்பு நிலைக்கு கொண்டு வரவேண்டுமெனில் 25 சதவீதம் செஸ் விதிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி முறையில் சொகுசு கார்கள், புகையிலை, நிலக்கரி உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் வரி விதிக்க முடியும். இதன் மூலம் மாநிலஅரசுகளுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை ஈடு செய்ய முடியும். இதற்கென தனி நிதியம் ஏற்படுத்தப்பட்டு இதில் கூடுதல் வரி சேர்க்கப்படும். இந்த நிதியிலிருந்து மாநில அரசு களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஜிஎஸ்டி முறையில் அதிகபட்சமாக 28 சதவீத வரி வரம்பில் உள்ள சொகுசு கார் களுக்கு ஒரு சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டு அது மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிதியத்தில் சேர்க்கப்படும். செப்டம்பர் 9-ம் தேதி கூடஉள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எப்போதிலிருந்து இத்தகைய கூடுதல் வரி (செஸ்) அமல்படுத்தலாம் என்பது இறுதிசெய்யப்படும் என தெரிகிறது.

வளர்ச்சியைப் பாதிக்கும்

சொகுசு கார்களுக்கு கூடுதல் வரி (செஸ்) விதிப்பது என்ற மத்திய அரசின் முடிவு இத்து றையின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும் என்று மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, ஜேஎல்ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு வரி வருவாய் குறித்து பரிசீலித்து இத்தகைய முடிவை அரசு எடுத்திருக்கலாம். அதற்குப் பதிலாக உடனடியாக கூடுதல் வரி விதிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று இந்நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்த நடவடிக்கையால் சந்தையில் சொகுசு கார்களின் விற்பனை பாதிக்கும். மேலும் இது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்று மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோலண்ட் ஃபோல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி எனும் ஒரு முனை வரி விதிப்பால் ஏற்படும் சாதக அம்சங்களின் பலனை ஆட்டோமொபைல் துறை இன்னமும் முழுமையாக அனுபவிக்காத நிலையில் இத்தகைய கூடுதல் வரி விதிப்பு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

சில குறிப்பிட்ட ரக சொகுசு கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்று மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா கூறினார்.

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வரி குறைந்து விரிவாக்க நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றிருந்த நிலையில் கூடுதல் வரி விதிப்பு அத்தகைய விரிவாக்க செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது என்று ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரோஹித் சூரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x