Last Updated : 24 Aug, 2017 10:35 AM

 

Published : 24 Aug 2017 10:35 AM
Last Updated : 24 Aug 2017 10:35 AM

நிறுவனங்கள் நியாயமானவரி விதிப்பிலிருந்து தப்ப முடியாது: மத்திய நேரடி வரி ஆணையர் உறுதி

நியாயமான வரிவிதிப்பிலிருந்து நிறுவனங்கள் தப்பிக்க முடியாது என்று மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று பேசிய மத்திய நேரடி வரி ஆணையத்தின் (சிபிடிடி) தலைவர் சுஷில் சந்திரா, வரி விவரங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ் தற்போது தகவல்கள் வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) நியாயமான வரி விதிப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்றார்.

தொழில்துறை அமைப்பான அசோசேம் ஏற்பாடு செய்திருந்த 14-வது சர்வதேச வரி மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது:

பல்வேறு நாடுகளிலிருந்து பரவலான விவரங்கள் பெறுகிறோம். 130 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது சர்வதேச சந்தை சூழல். வரி தொடர்பான விவரங்கள் வெளிப்படையாக விரைவாக கிடைக்கிறது.

பனாமா பேப்பர் விவரங்களை சுட்டிக் கட்டிய அவர், எந்த விவரங்களாவது மறைமுகமாக இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார். இந்த விவரங்கள் பல்வேறு நாடுகளிலிருந்து திரட்டப்பட்டவை என்றார்.

பனாமா பேப்பர் விவரங்களின் அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஏற்கெனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சில விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சம்பந்தப்பட்டவருக்கு அவரது வருமான வரி விவரம் மற்றும் உயர்த்தப்பட்ட வரி செலுத்துவது குறித்து நோட்டீஸ் அனுப்பப்படும். குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சட்டத்தில் இடமுள்ளது. வரி மோசடியில் ஈடுபடும் தொழில்களை தடை செய்யும் சூழலும் உருவாகும் என்று ஆகஸ்ட் 1ம் தேதி மக்களைவையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.

130 நாடுகளுடன் இந்தியா வரி விவரங்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பது மற்றும் வரி விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

மத்திய நேரடி வரி ஆணையம் கறுப்பு பணத்தை ஒழிக்க உறுதி கொண்டுள்ளது. வரிச் சட்டங்களில் தெளிவு, வழக்குகளை குறைக்கவும் இலக்குகளை வைத்துள்ளது.

ஜூன் 6ம் தேதி, இந்தியா உட்பட 65 நாடுகள், வரி மேம்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தவிர 171 நாடுகளுடன் முன்கூட்டிய விலை ஒப்பந்தத்தில் மத்திய நேரடி வரி ஆணையம் ஈடுபட்டுள்ளது என்று சந்திரா கூறினார்.

வரி விதிப்பின் முதன்மையானது வரி வெளிப்படைத் தன்மை. வரி சட்டங்களை மிகச் சிறப்பாக கையாள வேண்டிய தேவை உள்ளது. வரி சட்டங்களை மேலும் எளிமைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் சிபிடிடி வரவேற்பதாகக் கூறினார். சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது நியாயமாக வரி செலுத்துபவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை சிபிடிடி உறுதி செய்கிறது. சட்டத்தை தவறாகக் கையாளக்கூடாது. பரிவர்த்தனைளில் வெளிப்படைதன்மை, சாத்தியமெனில் வழக்குகளில் சமரச தன்மையையே விரும்புகிறது.

சர்வதேச வரி விதிப்பு விவகாரத்தை பொறுத்த வரையில் எந்த ஒரு நாடும் முழுமையாக தயாராகவில்லை. பல நாடுகள் தங்களது வரி விதிப்புகளை பகிர்ந்து கொள்ள பேசி வருகின்றன என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x