Last Updated : 11 Nov, 2014 09:54 AM

 

Published : 11 Nov 2014 09:54 AM
Last Updated : 11 Nov 2014 09:54 AM

பொருளாதார வளர்ச்சி 6% அதிகமாக இருக்கும்: நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை

அடுத்த நிதி ஆண்டில் (2015-16) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய நிதித்துறை இணையமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயந்த் சின்ஹா, வேலை வாய்ப்பை உருவாக்குவது மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் அரசின் முன் உள்ள முன்னுரிமை பணி என்று குறிப்பிட்டார்.

நடப்பு நிலையுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் முதல் 6.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என்று அவர் சுட்டிக் காட்டினார். வரும் ஆண்டுகளில் இது 7 சதவீதம் முதல் 8 சதவீத அளவை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த நிதி ஆண்டில் (2013-14) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீத அளவுக்குச் சரிந்தது. இது நடப்பு நிதி ஆண்டில் 5.4 சதவீதம் முதல் 5.9 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

51 வயதான ஜெயந்த் சின்ஹா முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன். இவர் டெல்லி ஐஐடி-யிலும் ஹார்வர்ட் பல்கலையிலும் படித்தவர். நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இவருக்கு நிதித்துறை இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் தொகுதியிலிருந்து இவர் மக்களைவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு, முதலீட்டு நிதி ஆலோசகராக ஜெயந்த் சின்ஹா இருந்தார்.

நவம்பர் 24-ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் காப்பீடு மசோதா மற்றும் சரக்கு சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும் என்று ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை தெரிவித்தார்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு போதுமான ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான மசோதாவை நிறைவேற்றுவதில் பல ஆண்டுகளாக ஒருமித்த கருத்து எட்டப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குளிர்கால கூட்டத்தின்போது இதை நிறைவேற்றுவற்கு சாதகமான சமிக்ஞைகள் தெரிவதாக அவர் கூறினார். அரசின் நிதி நிலை குறித்து பேசிய அவர், வரி வருவாய் விஷயத்தில் அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசின் முன்னுரிமை செயல்பாடுகளை ஏற்கெனவே பிரதமரும், நிதியமைச்சரும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் துவக்கிவிட்டதாகக் கூறினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்தபடியாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகும். இரண்டாவதான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசு சிறப்பாக செய்து வருகிறது. இதன் மூலம் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. தேர்தல் சமயத்தில் விலைவாசி உயர்வு முக்கிய விஷயமாக பேசப்பட்டது. அந்த விஷயத்தில் அரசு மிகவும் எச்சரிக்கையாகவே செயல்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகள் அவசியம். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் நமது செலவுகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும். இதன் மூலம் நமது பற்றாக்குறை அளவு கணிசமாகக் குறையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x