Published : 08 Aug 2017 10:17 AM
Last Updated : 08 Aug 2017 10:17 AM

தொழில் முன்னோடிகள்: நாராயண மூர்த்தி (1946)

சொ

ந்தமாகத் தொழில் தொடங்கி நடத்துவது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயமல்ல, மாரத்தான் ஓட்டம்.

- நாராயண மூர்த்தி

இந்திய பிசினஸ் வரலாற்றில் நாராயண மூர்த்திக்கு தனியிடம் உண்டு. மூன்று காரணங்கள்;

தொழிலதிபர்களின் வாரிசுகள் மட்டுமே பிசினஸ் தொடங்கமுடியும் என்றிருந்த காலகட்டத்தில், சாமானியர்களும் சாம்ராஜியம் அமைக்கமுடியும் என்று நிரூபித்தவர்.

ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் பங்குகளை ஊக்கப்பரிசாகத் தந்து, பல நூறு கோடீஸ்வரர்களையும், பல்லாயிரம் லட்சாதிபதிகளையும் உருவாக்கியவர்.

1993–ல் இன்ஃபோசிஸ் ஐ.பி.ஓ. வந்தபோது தலா 95 ரூபாய் விலைக்கு 100 பங்குகள் வாங்கியிருந்தால், அந்த 9,500 ரூபாய் முதலீட்டின் இன்றைய மதிப்பு ரூ.53 லட்சம். 24 வருடங்களில் 555 மடங்கு அதிகரிப்பு. ஏராளமான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச் சந்தைக்கு ஈர்த்தவர்களில் முக்கியமானவர்.

******

கர்நாடக மாநிலம். கோலார் மாவட்டம். சித்தலகட்டா என்னும் சின்ன ஊர். நாகவர ராமராவ் உயர்நிலைப் பள்ளியில், கணித, இயற்பியல் ஆசிரியர். எட்டுக் குழந்தைகள். சிரமமான வாழ்க்கை. தீபாவளிக்கு மட்டும்தான் புத்தாடைகள். ஆனால், பெற்றோர் அற்புதமான ஒரு செல்வத்தை அள்ளி அள்ளித் தந்தார்கள். அந்தச் சொத்து, நன்றாகப் படிப்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்னும் கொள்கை.

அப்பாவுக்கு அடிக்கடி வேலையில் இட மாற்றம். மாண்டியா, மதுக்கரே, மைசூர், ஸ்ரீநிவாஸ்பூர், தும்கூர் எனப் பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் படிப்பு. இவை மூர்த்தியைப் பாதிக்கவில்லை. எப்போதும், படிப்பில் முதலிடம்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதினார். மைசூர் போன்ற நகரங்களில் பயிற்சி தரவோ, சந்தேகங்கள் தீர்க்கவோ யாரும் கிடையாது. சொந்த அறிவால், கடும் உழைப்பால், இந்திய அளவில் பதினேழாம் இடம். உதவித் தொகைக்கும் தகுதி. ஆனால், ஐ.ஐ.டி. போகமுடியாத நிலை. அப்பா சம்பளம் மாதம் 250 ரூபாய்தான். பெரும் குடும்பத்தின் செலவுகளோடு மகனின் விடுதிச் செலவையும் சமாளிக்கப் போதவே போதாது.

மூர்த்தி கசப்பான நிஜத்தை விழுங்கிக்கொண்டார். பிடித்தது கிடைக்காவிட்டால், கிடைத்ததைப் பிடிக்கப் பழகிக்கொள்ளும் மனப் பக்குவம் அந்தப் பதின்ம வயதிலேயே.

உள்ளூர் மைசூரிலேயே, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் என்னும் தேசியப் பொறியியல் கல்லூரியில் பி.ஈ. படிப்புக்குச் சேர்ந்தார். தேர்ந்தெடுத்த பிரிவு, எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங். இங்கும் தனி முத்திரை – கல்லூரியில் முதல் இடம். முதுநிலைப் படிப்புக்குக் கான்பூரில் இருக்கும் ஐ.ஐ.டி–ல் இடம். படிப்பு, விடுதி, சாப்பாடு என அத்தனை செலவுகளுக்கும் போதுமான உதவித் தொகை.

அப்போது, கான்பூர் ஐ.ஐ.டி – யில் அமெரிக்காவிலிருந்து ஒரு ஐ.பி.எம். கம்ப்யூட்டர் இறக்குமதி செய்தார்கள். அதைப் பார்த்த நம் மைசூர் இளைஞர் பிரமித்தார். தன் ராஜபாட்டை வாழ்க்கையின் கதவுகளை இந்த ராட்சச இயந்திரம் திறக்கும் என்று அவர் அப்போது நினைத்திருக்கமாட்டார்.

எம். டெக் படிப்பு முடித்தார். ஏர் இந்தியா, எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன், ஹெச்.எம்.டி, டெல்கோ (இன்றைய டாடா மோட்டார்ஸ்) எனப் பல முன்னணி நிறுவனங்களிலிருந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்கள். அதே சமயம், அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பேராசிரியர் கிருஷ்ணையா, சீப் சிஸ்டம் புரோகிராமர் ( Chief Systems Programmer) வேலைக்கு அழைத்தார். அவர் மீது கொண்டிருந்த பெருமதிப்பால், பிற நிறுவனங்களைவிட ஊதியம் குறைவாக இருந்தபோதும், ஐ.ஐ.எம். வேலையில் சேர்ந்தார்.

``நான் என் வாழ்க்கையில் எடுத்த மிக முக்கியமான, சிறப்பான முடிவு இது” என்று மூர்த்தி சொல்லுவார். சுமார் 20 மணி நேரம் கம்ப்யூட்டரோடுதான். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு இடதுசாரிக் கொள்கைகள் மேல் ஈடுபாடு வந்தது . மனதில் கம்யூனிஸ்ட் ஆனார்.

ஐ.ஐ.எம் – இல் மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் எஸ்இஎஸ்ஏ (SESA) நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கே மூன்று வருடங்கள். கம்யூனிசம் செல்வம் சேர்ப்பதற்கு எதிரியல்ல, ஊழியர்களைச் சுரண்டாமல் பலன்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளச் சொல்கிறது என்னும் முடிவுக்கு வந்தார். சம்பாத்தியத்தில் பெரும்பகுதியைப் பிறருக்கு உதவச் செலவிட்டார். 1974-ம் ஆண்டு கையிருப்பு வெறும் 450 டாலர்கள். தரை மார்க்கமாக இந்தியா திரும்ப முடிவு செய்தார். பல நாடுகளைப் பார்க்கலாம், பயணச் செலவும் குறைவு. வழியில், பல்கேரிய நாட்டில் விசித்திர அனுபவம். சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். 60 மணி நேரம் சிறை. தவறை உணர்ந்து விடுதலை செய்தார்கள்.

1975. இந்தியா திரும்பிய மூர்த்தி ஸாஃப்ட்ரானிக்ஸ் என்னும் கம்பெனி தொடங்கினார். ஒன்றரை வருடம் கடுமையாக உழைத்தும், மூடவேண்டிய கட்டாயம். பூனேவில் இருந்த பட்னி கம்ப்யூட்டர் ஸிஸ்டம்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். இப்போது, டெல்கோ நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்த சுதாவுடன் சந்திப்பு, காதல். 1978 – இல் திருமணம்.

மூர்த்திக்கு இன்னொருவரிடம் கைகட்டி வேலை பார்க்கப் பிடிக்கவில்லை. பட்னி சகாக்கள் ஆறு பேரோடு சேர்ந்து கம்ப்யூட்டர் தொடர்பான கம்பெனி தொடங்கத் திட்டமிட்டார். இரண்டு தடைக்கற்கள் – வேலையை விட்டால், குடும்பச் செலவை எப்படிச் சமாளிப்பது, அவர் பங்கான பத்தாயிரம் ரூபாய் முதலீட்டுக்கு என்ன செய்வது? சுதா கருவுற்றிருந்த நேரம். தைரியமாகத் தீர்வு தந்தார்.``என் சேமிப்பிலிருந்து பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். அடுத்த மூன்று வருடங்கள் குடும்பச் செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.”

1981. தைரியமாக இன்ஃபோசிஸ் தொடங்கினார். எதிர்பாராத பல பிரச்சினைகள். வங்கிகளுக்கு மென்பொருள் பிசினஸ் என்றால் என்னவென்றே புரியவில்லை. கடன் தர மறுத்தார்கள். தொலைபேசி இணைப்புக் கிடைக்க ஒரு வருடம்; கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு அரசாங்க அனுமதிக்கு இரண்டு வருடங்கள். ஆரம்ப வருடங்களில், கம்பெனி வாகனமாக சைக்கிள், ஸ்கூட்டர், பிசினஸ் உரையாடல்களுக்கு டெலிபோன் பூத், பணிகளுக்கு வாடகைக் கம்ப்யூட்டர்கள். கடும் உழைப்பும், ஜெயிக்கும் வெறியும் மட்டுமே அவர்களது சொத்துகள். அடுத்த பத்து வருடங்கள் எப்போதும் பணத் தட்டுப்பாடு. கம்பெனியை விற்றுவிடலாமா என்று பங்காளிகள் சிலர் நினைத்தபோது விடாப்பிடியாக மறுத்தார்.

1990. ஒரு ஹாங்காங் பத்திரிகைக்காக இந்தியாவின் அவுட்சோர்ஸிங் என்னும் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். டிஜிட்டல் எக்யூப்மென்ட் என்னும் அமெரிக்க நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மைக் ஷாவை பெங்களூருவில் பேட்டி கண்டேன். அப்போது இன்ஃபோசிஸ் என்கிற நிறுவனத்தை ஒரு சிலருக்கே தெரியும். மைக் ஷா சொன்னார் ``இந்திய அவுட்சோர்ஸிங் துறையின் வரலாற்றை நாராயண மூர்த்தி இல்லாமல் எழுதவே கூடாது.” அவரே, என் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். பெங்களூரு இந்திராநகரில், சிறிய கட்டிடம். அதில் சுமார் நூறடிச் சதுர அறை. அப்போது, அந்த ஐந்தடி நான்கு அங்குல மனிதர் இத்தனை விஸ்வரூபம் எடுப்பார் என்று நான் நினைக்கவேயில்லை. மைக் ஷா எத்தனை பெரிய தீர்க்கதரிசி!

நான் மட்டுமல்ல, யாருமே இன்ஃபோசிஸ் வளர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. 1993. இன்ஃபோசிஸ் ஐ.பி.ஓ. வந்தது. முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை. சிரமப்பட்டுத்தான் பங்குகளை விற்க முடிந்தது. ஊழியர்கள்தாம் இன்ஃபோசிஸ் தூண்கள் என்பதில் மூர்த்தி உறுதியாக இருந்தார். சிறந்த கல்வி நிலையங்களிலிருந்து, அதித் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தார். அவர்களின் அர்ப்பணிப்பை அதிகமாக்க, அமெரிக்காவில் பரவலாக இருந்த எம்ப்ளாயி ஸ்டாக் ஆப்ஷன் பிளானை ( Employee Stock Option Plan) அறிமுகப்படுத்தினார். ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசாக கம்பெனி பங்குகள் தரும் திட்டம். கடைநிலைப் பணியாளர்களான டிரைவர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பியூன்கள் போன்ற பல்லாயிரம் பேரை லட்சாதிபதிகளாக்கியது. செல்வத்தைப் பகிர்ந்துகொள்ளும் இடதுசாரி மன வெளிப்பாடு. 2011. மூர்த்தி கம்பெனிக் கடிவாளத்தைச் சகாக்களிடம் தந்தார். கெளரவச் சேர்மன் ஆனார். 2013 – இல் திரும்பிவந்தவர், அடுத்த வருடம் விலகிக்கொண்டர்.

இன்று இந்திய மென்பொருள் நிறுவனங்களில் முதல் இடம் பிடித்திருப்பது டி.சி.எஸ். இரண்டாம் இடம் இன்ஃபோசிஸ். 31 நாடுகளில் 85 அலுவலகங்கள், 100 சாஃப்ட்வேர் அபிவிருத்தி மையங்கள், 2 லட்சம் ஊழியர்கள், ரூ.68,484 கோடி ஆண்டு வருமானம். இதே சமயம், சமுதாயப் பொறுப்போடு கிராமப் பள்ளிகளில் டாய்லெட்கள், நூலகங்கள், கேன்சர், தொழுநோய் வியாதிக்காரர்களுக்கு இலவசச் சிகிச்சை, அநாதைகள் ஆதரவு, தொழில் முனைவோருக்கு வென்ச்சர் கேபிட்டல் எனப் பல்வேறு செயல்பாடுகள். கார்ப்பரேட்களுக்குக் கருணை முகம் உண்டு என்று நிரூபித்த நாராயண மூர்த்தியின் இன்னொரு மகத்தான சாதனை.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x