

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இன்னும் சில நாட்களில் காலாண்டு முடிவுகள் வெளிவரத் தொடங்கும்.
இந்த காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்காது என இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் ஜூலை 13-ம் தேதி டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு ஜூலை 14-ம் தேதியும், விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு முடிவு ஜூலை 20-ம் தேதியும் வெளியாக இருக்கிறது. ஜூன் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்காது. விசா செலவுகள், ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் ஊதிய உயர்வு காரணமாக லாப வரம்பு குறைவாக இருக்கும். தவிர அமெரிக்க டாலருக்கு நிகராக பவுண்ட், யூரோ, யென் ஆகிய நாணய மதிப்புகள் உயர்ந்துள்ளன. இதன் காரணமாகவும் லாப வரம்பு பாதிக்கப்படக் கூடும் என எடில்வைஸ் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் ஜூன் காலாண்டு வருமானம் 1% முதல் 4.2% வரையிலும் உயர்வு இருக்க கூடும் என்றும் எடில்வைஸ் தெரிவித்துள்ளது.
ஐடி நிறுவனங்களின் முக்கிய வருமானம் நிதிச்சேவைகள் பிரிவுதான். ஆனால் இந்த பிரிவு சர்வதேச அளவில் மந்தமாக இருக்கிறது. தவிர இந்திய ஐடி நிறுவனங்களுக்கு விசா சார்ந்த நெருக்கடிகளும் இருக்கின்றன. அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் விசா நெருக்கடிகள் உள்ளன. இதனால் அதிக பணியாளர்களை வேலையில் இருந்து இந்த நிறுவனங்கள் நீக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இதனை நிறுவனங்கள் மறுக்கின்றன. சில நிறுவனங்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளைத் தள்ளிவைத்திருக்கின்றன.