Published : 28 Jul 2017 09:12 AM
Last Updated : 28 Jul 2017 09:12 AM

பிரீசார்ஜை வாங்கியது ஆக்ஸிஸ் வங்கி: வாங்கிய விலையைவிட 90% தள்ளுபடியில் விற்றது ஸ்நாப்டீல்

ஸ்நாப்டீல் குழுமத்தை சேர்ந்த பிரீசார்ஜ் நிறுவனத்தை 385 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஆக்ஸிஸ் வங்கி முடிவெடுத்திருக்கிறது. ஆக்ஸிஸ் வங்கி டிஜிட்டல் பிரிவில் கவனம் செலுத்துவதற்காக இந்த நிறுவனத்தை வாங்கி இருக்கிறது. டிஜிட்டலை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த இந்த கையகப்படுத்தல் நடந்திருக்கிறது.

ஸ்நாப்டீல் குழுமத்தை சேர்ந்த பிரீசார்ஜ் நிறுவனத்தை 6 கோடி டாலருக்கு (ரூ.385 கோடி) ஆக்ஸிஸ் வங்கி வாங்க இருக்கிறது. ஆனால் 2015-ம் ஆண்டு 40 கோடி டாலருக்கு ஸ்நாப்டீல் வாங்கியது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 90 சதவீத தள்ளுபடி விலையில் ஆக்ஸிஸ் வங்கி, பிரீசார்ஜ் நிறுவனத்தை வாங்கி இருக்கிறது.

தவிர 2 கோடி டாலருக்கு சில நிறுவனங்கள் வாங்க முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசான் நிறுவனமும் பிரீசார்ஜ் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இருந்தது. பேடிஎம் நிறுவனம் 2 கோடி டாலர் கொடுக்க முன்வந்ததாக தெரிகிறது. ஆனால் ஆக்ஸிஸ் வங்கி அதிக தொகைக்கு கேட்டதால் பிரீசார்ஜ் விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரீசார்ஜ் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும். ஆனால் இந்த வாடிக்கையாளர்களால் வங்கியின் வளர்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறியே என கார்ட்னர் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் சான்டி ஷேன் கூறினார். மேலும், டிஜிட்டல் வாலட் பிரிவில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. போட்டி நிறைந்த இந்த துறையில் வாடிக்கையாளரை திருப்திபடுத்த பல முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற நிறுவனங்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியாது. பிரீசார்ஜ் நிறுவனத்தின் தொழில்நுட்பம் சிறப்பாக இருந்தது. தவிர வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் பிராண்ட் மதிப்பு இருந்ததால் இந்த நிறுவனத்தை வாங்கி இருக்கிறோம். அதே பெயரில் நிறுவனத்தை தொடருவோம் என ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மா தெரிவித்தார்.

பிரீசார்ஜ் நிறுவனத்தில் 5.40 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இதில் 70 சதவீதம் 30 வயதுக்கு கீழ் இருப்பவர்கள். மாறாக ஆக்ஸிஸ் வங்கியில் 2 கோடி சேமிப்பு கணக்குகள் இருக்கின்றனர். ஆக்ஸிஸ் வங்கி ஏற்கெனவே லைம் என்னும் பேமெண்ட் வாலட் நிறுவனத்தை வைத்திருக்கிறது. இதனால் பிரீசார்ஜ் மற்றும் லைம் ஆகிய நிறுவனங்கள் இரண்டும் ஒன்றாக இணைக்கப்படும் என ஷிகா சர்மா தெரிவித்தார்.

ஷிகா சர்மா பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

28CH_AXIS_BANK ஷிகா சர்மா ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மாவின் பதவி காலம் முடிவடைய இன்னும் 11 மாதங்கள் இருக்கிறது. இந்த நிலையில் இவரது பதவி காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராக ஷிகா சர்மா இருப்பார்.

இந்த அறிவிப்பு மூலம் கடந்த சில வாரங்களாக இருந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. வங்கியின் அடுத்த தலைவரை தேடும் பணி நடந்து வருவதாகவும், ஆக்ஸிஸ் வங்கியில் பணி முடிந்த பிறகு டாடா குழுமத்தில் ஷிகா சர்மா இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இயக்குநர் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு ஆக்ஸிஸ் வங்கியில் ஷிகா சர்மா இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x