

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் உடனடியாக ரூ.552 கோடியை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூலை 15-க்கு பிறகு பரோலை நீட்டிக்க வேண்டும் என்கிற மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. செபி-சஹாரா கணக்கில் இரண்டாவது தவணைத் தொகை ரூ.552 கோடியை உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவினை வழங்கி உள்ளது. டெபாசிட் செய்வதற்கான நாட்களை நீட்டிக்க முடியாது. திட்ட மிட்டபடி குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் காசோலையை செலுத்தவும் கூறியுள்ளது. ஒருவேளை இந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தால் மஹாராஷ்டிரா, ஆம்பிவேலி சொத்தை ஏலம் விட நீதிமன்றம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறினர். இந்த சொத்துகள் தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் சுப்ரதா ராயை எச்சரித்துள்ளது.
சுப்ரதா ராய் சார்பாக வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். இதுவரை மொத்தம் ரூ.13,316 கோடி தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணத்தை செலுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம். பணத்தை செலுத்தாததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறினார்.
ஏப்ரல் 27-ம் தேதி நிறுவனம் ரூ.2,000 கோடியை செபி சஹாரா கணக்கில் டெபாசிட் செய்வதாக உத்தரவாதத்தை நீதிமன்றத்துக்கு அளித்திருந்தது. இந்த தொகைக்கு ஜூன் 15-ம் தேதி ரூ.1,500 கோடி, ஜூலை 15-ம் தேதி ரூ.552 கோடி என இரண்டு காசோலைகளை அளித்திருந்தது. இதில் முதல் காசோலையில் பணம் பெறப்பட்டுள்ளது. இரண்டாவது காசோலை தற்போது வங்கியில் செலுத்தப்பட உள்ளது. சஹாரா நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.24,000 கோடியில் தற்போது ரூ.9,000 கோடி நிலுவை உள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.