Published : 10 Jul 2017 09:40 AM
Last Updated : 10 Jul 2017 09:40 AM

ஏர் இந்தியா நிறுவனத்தை பிரித்து விற்பதற்கு மத்திய அரசு முடிவு

ஏர் இந்தியா நிறுவனத்தை பகுதி பகுதியாக பிரித்து விற்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. தற்போது ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் பகுதி பகுதியாக பிரித்து விற்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியில் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கு முடிவு செய்தது. சில ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் மத்திய அரசு அதிக தொகை முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இதையெடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 850 கோடி டாலர் கடன் இருக்கிறது. விமான போக்குவரத்து சந்தையில் ஏர் இந்தியாவின் பங்கு13 சதவீதமாக குறைந்துள்ளது. மாறாக இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்களின் சந்தை அதிகரித்து வந்துள்ளது.

இதற்கு முன்பாக ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. தற்போது மீண்டும் நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2018-ம் ஆண்டு முதல் பாதியில் விற்றுவிட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாகவும், இதற்கான வேலைகளும் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இலக்கு குறிக்கோளுடன் இருக்கிறது. ஆனால் அதற்கான நடைமுறைகள் மிக சிக்கலானது. மத்திய அரசு பங்குகளை வைத்துக் கொள்ளப்போகிறதா? முற்றிலும் விற்கப்போகிறதா? என்பது தெரியவில்லை. மேலும்பகுதி பகுதியாக விற்கும் போது லாபம் வரக்கூடிய தொழில்களை வாங்குவதற்கு நிறுவனங்கள் ஆவலாக இருக்கும். நஷ்டத்தைச் சந்தித்துவரும் தொழில்கள் மீது கவனம் குறைவாக இருக்கும். அதை யாரும் வாங்கவில்லையென்றால் மேலும் சிக்கல் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர் சங்கங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பல்வேறு சொத்துக்கள் முழுமையாக மதிப்பிடவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது ஏர் இந்தியாவை விற்பது என்பது சிக்கலானது. அவ்வளவு எளிதாக இதை செயல்படுத்தமுடியாது. பகுதி பகுதியாக விற்பது என்பதும் சரியான முடிவு அல்ல என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டு தலைவர் ஜித்தேந்திர பார்கவா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் விற்பனை செயல்முறைகளைப் பற்றி கருத்து கூற ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லோஹானி மறுத்துவிட்டார்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு இந்த மாதத்தில் சந்தித்து, ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை குறித்த செயல்முறைகளை வடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலத்துக்கான விதிமுறைகள், எவ்வளவு பங்குகள் விற்பது என்பன குறித்தும் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் எந்தவொரு தொழிலையும் தொடர்வதற்கு விரும்பவில்லை. எவ்வளவு விற்கமுடியுமோ அவ்வளவையும் விற்பதற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு இந்தியர்களின் கையில் ஏர் இந்தியா வழங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி டாடா நிறுவனமும் இண்டிகோ நிறுவனமும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x