

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கேபிடல் மற்றும் ஐடிஎப்சி வங்கி ஆகிய இரு நிறுவனங்கள் இணைய திட்டமிட்டிருக்கின்றன. இதன் மூலம் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.60,000 கோடிக்கு மேல் இருக்கும்.
ஸ்ரீராம் குழுமத்தில் பட்டியலிடப்பட்ட ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐடிஎப்சி வங்கியுடன் இணையும். பட்டியலிடப்படாத ஆயுள் மற்றும் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் ஐடிஎப்சி நிறுவனத்துடன் இணையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முடிவெடுக்க ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் சனிக்கிழமை கூட இருக்கிறது. இந்த இணைப்பு முடிவடையும் பட்சத்தில், ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியேறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீராம் கேபிடலில் 20 சதவீத பங்குகளை பிரமல் வைத்திருக்கிறது.
தவிர இந்த இணைப்புக்கு பிறகு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி 10 சதவீதத்துக்கும் மேலான பங்குகளை பிரமல் வைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, வங்கியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் 10 சதவீதத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது. இந்த பேச்சு வார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இது குறித்து ஐடிஎப்சி வங்கி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஐடிஎப்சி வங்கி தொடங்க கடந்த 2014-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்தது. தற்போது 76 கிளைகளுடன் இந்த வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கி தென் இந்தியாவில் 65 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கிராம விடியல் நிறுவனத்தை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீராம் குழுமத்தை சேர்ந்த சிட் பண்ட் தொழில் இந்த இணை ப்பில் வராது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.