

திருத்தப்பட்ட புதிய விலைகளை அச்சிடவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் எச்சரிக்கை செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு பொருட்களின் விலை விவரத்தை பேக்கிங் பொருட்களின் மீது அச்சிட வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் நுகர்வோரின் புகாரின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக ரூ.1 லட்சம் வரையிலான அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வரை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் கூறினார். உற்பத்தியாளர்கள் இதுவரை விற்பனை செய்யாத சரக்குகளை மாற்றப்பட்ட எம்ஆர்பியில் செப்டம்பர் வரை விற்பனை செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு நுகர்வோர் தரப்பிலிருந்து எழும் சிக்கல்களுக்கு தீர்வுகாண தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. வரி தொடர்பான சந்தேகங்களை தீர்க்க 14 உதவி எண்கள் தற்போது 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி எண்கள் மூலம் இதுவரை 700 சந்தேகங்கள் வந்துள்ளன.
ஜிஎஸ்டி சட்டத்துக்கு பிறகு சில பொருட்களின் விலை குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். இதனால் நிறுவனங்கள் இதுவரை விற்காத பொருட்களின் மீது புதிய விலை மறு அச்சு செய்யுங்கள் என்கிறோம். நுகர்வோருக்கு புரியும் வகையில் ஜிஎஸ்டி விவரங்களை குறிப்பிட்டு மாற்றமடைந்துள்ள விலையை ஸ்டிக்கர் மூலம் அச்சிட்டு ஒட்டவும் என்றும் கூறினார். இப்படி மாற்றிய விலையை அச்சிடவேண்டியது கட்டாயம். இல்லை யெனில் பேக்கேஜிங் பொருட்கள் ச ட்டப்படி குற்றமாக கருதப்படும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் முதல் முறை தவறு செய்தால் ரூ.25,000 அபராதமாக விதிக்கப்படும். இரண்டாவது முறை புகார் வந்தால் ரூ.50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை மற்றும் அதற்கு மேலான குற்றங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் இருக்கும் என்றார். விலை விவரத்தை பேக்கிங் மீது ஒட்டுவதற்கு செப்டம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட விலை விவரத்தை பொருட்களின் மீது ஒட்டுவதுடன், அது குறித்து பொதுமக்களுக்கும் விளம்பரம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் பஸ்வான் கூறினார்.