தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த பணியைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனம் ரூ. 7.61 கோடி லஞ்சம்

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த பணியைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனம் ரூ. 7.61 கோடி லஞ்சம்
Updated on
1 min read

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனம் ரூ. 7.61 கோடி லஞ்சம் அளித்துள்ளது. 2011-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரையான கால கட்டத்தில் இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பாஸ்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிடிஎம் ஸ்மித் நிறுவனம் ,தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்ஹெச்ஏஐ) அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக தெரிவித்துள்ளது. மொத்தம் 11.80 லட்சம் டாலர் அளிக்கப்பட்டுள்ளது. சிடிஎம் ஸ்மித் நிறுவனத்தின் இந்தியப் பிரிவாக சிடிஎம் இந்தியா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் ஒப்பந்தப் புள்ளிகளைப் பெறுவதற்காக இந்த லஞ்சம் வழங்கியுள்ளதை அமெரிக்க நீதித்துறை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நீதித்துறை ஜூன் 21-ம் தேதியிட்ட கடிதத்தில் சிடிஎம் ஸ்மித் நிறுவனம் தனது ஊழியர்கள் மற்றும் ஏஜென்டுகள் மூலம் இந்தியப் பிரிவான சிடிஎம் இந்தியா நிறுவனம் ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற லஞ்சம் வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. நெடுஞ்சாலை அமைப்பது, வடிவமைப்பு ஒப்பந்தம், நீர் திட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்ற இந்த லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 லட்சம் டாலர் லாபம் இந்நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த பணிக்கான மொத்த தொகையில் 2 சதவீதம் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சிடிஎம் ஸ்மித் நிறுவன இந்தியப் பிரிவு அலுவலகம் கோவாவில் ஒரு நீர் திட்டப் பணியை நிறைவேற்ற உள்ளூர் அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் டாலர் தொகையை அளித்துள்ளது என்றும் நீதித்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.

சிடிஎம் இந்தியப் பிரிவின் மூத்த அதிகாரிகள் அனைவரும் சிடிஎம் ஸ்மித் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜென்டுகளாக செயல்பட்டு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இது தொடர்பாக நிர்வாக ரீதியில் விசாரணை நடத்தும்படி என்ஹெச்ஏஐ தலைவருக்கு மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். பாஸ்டன் நிறுவனம் 40 லட்சம் டாலர் லாபம் ஈட்டியது தொடர்பாக விசாரணை நடத்தியதில் லஞ்சம் கொடுத்து ஒப்பந்தப் பணிகளை பெற்று நிறைவேற்றியதன் மூலம் இத்தொகை கிடைத்துள்ளதை சிடிஎம் ஸ்மித் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இது தொடர்பான விசாரணையை இத்துடன் முடிப்பதாக நீதித்துறை தெரிவித்துவிட்டது. இது தொடர்பாக நிறுவன ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிடிஎம் ஸ்மித் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in