Last Updated : 20 Nov, 2014 09:57 AM

 

Published : 20 Nov 2014 09:57 AM
Last Updated : 20 Nov 2014 09:57 AM

வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஐ.ஓ.டி.

பிக் டேட்டா என்பது கிட்டத்தட்ட மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் சம்பந்தமான விஷயமாக மட்டுமே இருக்கும் போலிருக்கின்றதே! மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறையில் இல்லாதவர்கள் இதைப் பற்றி தெரிந்துகொள்ளவோ கவலைப் படவோ தேவையில்லையா? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றியிருக்குகும் ஏனென்றால் பிக்டேட்டா என்று பேச ஆரம்பித்தாலும் படிக்க ஆரம்பித்தாலும் பெரும்பாலான உதாரணங்கள் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறையை சார்ந்ததாகவே எங்கு பார்த்தாலும் இருக்கின்றது.

நான் ஒரு வங்கியில் விற்பனைப் பிரிவில் வேலை செய்கின்றேன். நான் ஒரு வங்கியில் கலெக்‌ஷன் பிரிவில் வேலை செய்கின்றேன். நான் ஒரு பார்மா கம்பெனியில் இருக்கின்றேன். நான் ஒரு கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கின்றேன். அதையெல்லாம் விடுங்கள் நான் ஒரு கன்ஸ்யூமர் குட்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். எங்களுக்கு இதனால் ஏதாவது உதவி கிடைக்குமா என்ற கேள்விக்கான பதிலை இப்போது பாரப்போம்.

அனைத்துத் துறைகளிலும்…

பிக்டேட்டாவின் உதவி என்பது கிட்டத்தட்ட ஒரு தொழிலின் எல்லா துறைகளிலும் உதவவே செய்யும் என்பது முதல் பதில். இரண்டாவது பதில் டேட்டா குவியல்களை சேகரிக்கும் எல்லா தொழில்களிலும் பிக்டேட்டாவின் தேவை ஒரு காலகட்டத்தில் அத்தியாவசியமாகும் என்பது. ஓ! எங்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. எங்கெல்லாம் மனிதன் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தி தொழில் செய்கின்றானோ அங்கெல்லாம் டேட்டா சேர ஆரம்பிக்கின்றது. டேட்டா குவியல் சேர ஆரம்பித்தால் அங்கே பிக்

டேட்டா அனலிடிக்ஸிற்கு வாய்ப்பு வந்துவிடுகின்றது என்பதைத்தானே சொல்ல வருகின்றீர்கள் என்பீர்கள். நீங்கள் சொல்லும் கம்ப்யூட்டர் உபயோகம் என்பது ஒரு கடையிலோ, தொழிற்சாலையிலோ, வங்கியிலோ மனிதர்கள் கம்ப்யூட்டரில் டேட்டாவை பதிவு செய்கின்றார்கள். நாளடைவில் அந்த டேட்டா குவியல் இமயமலையின் அளவைவிட அதிகமாகிவிடுகின்றது. அந்த டேட்டா குவியலில் முத்துக்குளிக்க பிக்டேட்டா அனலிடிக்ஸ் உதவுகின்றது என்றுதான் நாம் நினைத்துக்கொள்கின்றோம். ஆனால் நிஜத்தில் இன்னமுமே டெக்னாலஜி அட்வான்ஸாகப் போய்க்கொண்டிருக்கின்றது.

இன்டர்நெட் ஆப் திங்ஸ்

மனிதன் கம்ப்யூட்டர் டேட்டாபேஸில் தகவல்களை பதிந்தகாலம் போய் மிஷின்களே நேரடியாக டேட்டாவை பதிந்துவிடுகின்றன. அதிலும் இண்டர்நெட் வழியாக! அதாவது மெஷினும் மெஷினும் பேசிக்கொள்கின்ற காலகட்டத்திற்குள் நாம் வந்துவிட்டோம். 2020ல் கிட்டத்தட்ட முப்பது பில்லியன் உபகரணங்கள் இதுபோன்ற மெஷின்–டு-மெஷின் தகவல் பரிமாற்றத்தை செய்துகொண்டிருக்கும் என்று கணக்கீடு செய்துள்ளனர் ஆய்வாளர்கள்.

மனித இருதய செயல்பாட்டை தொடர்ந்து கணித்து இண்டர்நெட் வழியாக தகவல் சொல்லும் சின்னஞ்சிறு கருவிகள், பட்டியில் கட்டியிருக்கும் ஆடு மாடுகள் என்ன செய்கின்றது, எங்கே திரிகின்றது என்ற தகவல் பரிமாற்றத்தை தானாகவே செய்யும் பயோசிப் டிரான்ஸ்பாண்டர்கள், மோட்டார் சைக்கிள், கார்கள், லாரிகள் என அனைத்து ஆட்டோமொபைல்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் பல்வேறுவகை சென்சார்கள் இண்டர்நெட் வாயிலாக அனுப்பும் தகவல்கள் என்பது போன்ற பல்வேறு வகையான மெஷின்–டு-மெஷின் தகவல் பரிமாற்றங்கள் சாத்தியமே என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த வகை மெஷின்-டு-மெஷின் தகவல் பரிமாற்றங்கள் இண்டர்நெட் மற்றும் கிளவுட் வாயிலாக நடக்கும். அதனாலேயே இந்தவகை மெஷின்கள் சார்ந்த நெட்வொர்க்கை இண்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடீ) என்கின்றோம்.

ஐஓடீயின் உபயோகங்கள்

சுற்றுச்சூழல் மேலாண்மையில் ஆரம்பித்து சாலை மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு துறை, மருத்துவத்துறை, தொழிற்சாலை, டிராபிக், வாகனங்கள், வீடு மற்றும் அலுவலகத்தில் செய்யப்படும் ஆட்டோமேஷன்கள் அனைத்துமே இண்டர்நெட் மற்றும் கிளவுட் வாயிலாக டேட்டாபதிவு செய்யும் வசதிகொண்டவையாக மாறிவிடும். இந்த வகை பதிவுகளில் பலவும் மனிதர்கள் செய்யக்கூடியவையாக இருந்த போதிலும் தொடர்ந்து மனிதர்கள் கண்காணிப்பு தேவைப்படாததாக இருக்கும் இடங்களாக இருக்கும்.

அதனாலேயே, இந்த இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் மிகுந்த அளவில் மனித சமுதாயத்திற்கு உபயோகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு ஆறுவழிச் சாலையில் எங்கேயாவது ஒரு இடத்தில் டிராபிக் ஜாம் நடந்தால் அந்த டிராபிக்ஜாம் குறித்து அறியாமலேயே அவசரமாகச் செல்லும் பலரும் போய் சிக்கிக்கொள்வார்கள். ஐஓடீ டிவைஸ்கள் டிராபிக் ஜாமை தானாகவே கண்டறிந்து இண்டர்நெட்டில் பதிந்து இந்த ஊருக்கு போகின்றவர்களெல்லாம் இந்த சாலைகளில் செல்லுங்கள் என்று ஐந்து கிலோமீட்டருக்கு முன்னாலேயே எலெக்ட்ரானிக் போர்டில் காட்டிவிடும்.

ஹீம்!. இதற்கெதற்கு அனலிடிக்ஸ் என்பீர்கள். சென்சார் வேலை செய்தால் போதுமே என்ற வாதம் இங்கே செல்லாது போகும். மாற்றுப்பாதையில் அன்றைய டிராபிக் நிலைமை எப்படியிருக்கும் என்பதை ஏற்கனவே பல நாட்களாக பதிந்த டேட்டாக்களை அலசி இந்தப்பாதைதான் இன்றைக்கு இந்த சமயத்தில் ஃப்ரீயாக இருக்கும் என்று சொல்வதற்குத்தான் அனலிடிக்ஸ். வெறுமனே சென்சாரை வைத்தால் டிராபிக் ஜாம் இருக்கின்றது மாற்றுப்பாதையில் செல்லவும் என்று மட்டுமே சொல்லும். அனலிடிக்ஸோ இந்த ரூட்டை எடுங்கள் என ஆலோசனைதனைத் தரும்.

வீட்டிலும் உதவும்

வீட்டில் வயதானவர்கள் இருக்கின்றார்கள். நீங்களோ ஆபீசில் படு பிசி. மீட்டிங் மேல் மீட்டிங் நடக்கின்றது ஆபீசில். வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டார்களா? மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டார்களா? அட அதைவிடுங்கள். தூங்கியவர்கள் எழுந்தார்களா இல்லை அப்படியே மீளாத்தூக்கத்தில் இருந்துவிட்டார்களா? சரி எல்லாம் சரியாய் போகின்றது. வயதானால் திடீர் பிரச்சினைகள் வருகின்றதே. பெரியவர் பாத்ரூம் பக்கம் போனாரா இல்லையா? என்ற கவலையோடே நீங்கள் மீட்டிங்கில் இருக்கவேண்டியதில்லை.

சென்சார்கள் அவரை கண்காணித்து உங்களுக்குச் சொல்லும். இதிலென்ன அனலிடிக்ஸின் ரோல் என்றால் சின்னச் சின்ன வேலைகள்தான். பெரியவர் சாதரணமாக படுத்திருக்கும் நேரம். எத்தனை முறை பாத்ரூம் பக்கம் போவார் என்பதன் ட்ராக் ரிக்கார்டை சரிபார்த்தல் என தனியாளானாலும் அவருடைய டேட்டாவை அவர் சொல்லாமலேயே ட்ராக் செய்து ஆவரேஜ்களை கூட்டிக்கழித்து கணக்குப் பார்த்து அவருடைய பாடி டெம்ப்ரெச்சரையும் (சென்சார்) ஹார்ட் பீட்டையும் (வியரபிள் டிவைஸ்) கணக்குப்போட்டு அதன் பின்னரே உங்கள் மொபைல் போனுக்கு தகவல் அனுப்பும். வழக்கத்தை விட அதிக முறை போனாலோ அல்லது குறைந்த முறை பாத்ரூம் போனாலோ ஏதோ பிரச்சனை இருக்கின்றது என்று தானே அர்த்தம்.

அதை உங்களுக்கும், அவரின் டாக்டருக்கும் உடனே தெரிய படுத்தும். இதில் அனலிடிக்ஸின் ரோல் சின்னதாய் இருந்தாலும் தேவை பெரியது. இல்லையென்றால் பொழுதுபோகவில்லை கொஞ்சம் படுத்துக்கிடப்போம் என்று பெரியவர் படுத்திருக்க உங்களுக்கு மொபைலில் ஐயா ரொம்பநேரமா படுத்தே இருக்கின்றார். உடனடியாக வரவும் என தகவல் வந்தால் என்னவாகும் என்று பாருங்கள்.

ஐஓடீ எல்லாம் சாத்தியமா? எத்தனை பேர் இதை உபயோகிக்கப்போகின்றார்கள். இதெல்லாம் டெக்னாலஜிஸ்ட்களின் வளமான கற்பனை என்று கூட டெக்னாலஜி துறையில் இருப்பவர்களே அவ்வப்போது சொல்லி வருகின்றார்கள். இன்றைக்கே வீட்டிலிருக்கும் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டீவி, ஒவன் போன்ற பலவற்றில் சென்சார்கள் பல்வேறு விஷயங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன. இந்த மெஷின்கள் இன்னும் கொஞ்ச நாளில் ஐபி (நெட்வொர்க்) தகுதி கொண்டவையாக தயாரிக்கப்படும். சென்சார்கள் ஐபி அட்ரஸோடு இணைக்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டு அலசப்படும்.

ஐஓடி-தான் பிக்டேட்டாவை தொழில் மற்றும் வாழ்க்கையில் எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்லப்போகின்றது என்கின்றனர் வல்லுநர்கள். அதனால்தான் சுற்றுச்சுழல் விஷயத்தில் இருந்து மருத்துவத்துறை வரையிலும் அனலிடிக்ஸின் பயன்பாடு அதிகரிக்கப்போகின்றது என்ற கருத்தும் பலம் பெற்று வருகின்றது.

ஸ்மார்ட் போன்கள் அனைவரின் கையிலும் இருக்கின்ற காலம் இது. மனிதர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்துவந்த டேட்டாக்களையும் தாண்டி தற்போது சென்சார்கள் அடங்கிய மெஷின்கள் டேட்டாக்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன. ஐஓடீ-யின் வருகையால் மனிதர்கள் நேரம் செலவிட்டு ஒரு இடத்தில் இருந்து சேகரிக்க முடியாத டேட்டாக்களைக் (ஹைவே டிராபிக் ஜாம், வீட்டில் இருக்கும் பெரியவரின் செயல்பாடுகள், மூவ்மெண்ட் மற்றும் டெம்ப்ரேச்சர்) கூட சேகரிக்க முடிகின்றது. எல்லையில்லா டேட்டா சேகரிப்பு எல்லையில்லா அனலிடிக்ஸின் உபயோகத்திற்கு வழிவகை செய்யும் இல்லையா!

cravi@seyyone.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x