Published : 05 Jul 2017 03:38 PM
Last Updated : 05 Jul 2017 03:38 PM

ஜிஎஸ்டிக்கு அமலாக்கத்துக்குப் பிறகு விலையை மாற்றவில்லை என்றால் நடவடிக்கை: நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஜிஎஸ்டிக்கு பிறகு விலையை மாற்றவில்லை என்றால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முன் விற்கப்படாமல் இருந்த பொருட்களை ஜிஎஸ்டிக்கு பிறகு, ஜூலை 1ம் தேதியிலிருந்து விற்பனை செய்கையில் ஏற்படும் குழப்பங்களுக்கு இதன் மூலம் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ஏற்கெனவே பிரிண்ட் செய்யப்பட்ட விலைகளின் மேல், புதிய மாற்றப்பட்ட விலையை ஸ்டிக்கர் மூலம் பொருட்களின் மீது ஒட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் விற்பனை விலையில் இந்த மாற்றம் தெரிய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பல்வேறு தொழில்களிலும் ஜூலை 1ம் தேதிக்கு முன்னர் வரை மிக அதிக மதிப்பிலான சரக்குகள் விற்பனையாகாமல் இருந்தன. இந்த நிலையிலேயே ஜிஎஸ்டி சட்டம் அமலாகியது. இந்த விற்பனையாகாத சரக்குகளில் அச்சிடப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை பழைய வரி விகிதங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த நிலையில் புதிய வரி விதிப்பின் வரி விகிதங்களால் அந்த பொருட்களில் சில்லரை விற்பனை விலையில் மாற்றம் ஏற்படும். அதாவது புதிய வரி விகிதங்களால் விலை அதிகரிக்கும் அல்லது விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக நேற்று நுகர்வோர் விவகாரத்துறை செயலர் அவிநாஷ் ஸ்ரீவாஸ்தவா கூறியபோது, ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது கையிருப்பில் இருந்த பழைய பொருட்களின் சில்லரை விற்பனை விலை கண்டிப்பாக அந்த பொருட்களின் மீது தெரியப்படுத்த வேண்டும். அதுபோல ஜிஎஸ்டியால் மாற்றம் உருவான சில்லரை விற்பனை விலை விவரத்தை ஸ்டிக்கர் மூலம் அச்சிட்டு ஒட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுவரை விற்காத பொருட்களின் விலை அதிகரிக்கிறது என்றால் அதுகுறித்து அந்த பொருட்களின் உற்பத்தியாளர் , அல்லது இறக்குமதியாளர் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு செய்தித் தாள்கள் வழியாக இந்த மாற்றம் குறித்து விளம்பரம் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

எனினும் செப்டம்பர் 30 ம் தேதிக்கு பின்னர் பேக்கிங் செய்கின்ற அனைத்து பொருட்களிலும் ஜிஎஸ்டி சேர்த்த விலை விவரத்தை அச்சிட்டிருக்க வேண்டும். ஸ்டிக்கர்கள் மூலம் விலை விவரத்தை தெரிவிக்க முடியாது என்றும் கூறினர்.

இதன் மூலம் ஏற்கெனவே பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கான சில்லரை விற்பனை விலையை மாற்றியமைக்க செப்டம்பர் 30ம் தேதி வரை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கால அவகாசம் அளித்துள்ளது. இந்த விலை மாற்றத்தை ஸ்டிக்கர்கள், ஆன்லைன் பிரிண்டிங் அல்லது முத்திரை வழியாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

அந்த பொருளில் அச்சிடப்பட்டிருக்கும் உண்மையான விலையிலிருந்து தற்போது மாற்றப்பட்டுள்ள விலைதான் சில்லரை விற்பனை விலையாக இருக்கும். மாற்றப்பட்ட விலைக்கு அளிக்காமல் பழைய சில்லரை விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜிஎஸ்டியால் விளைந்த விலைக் குறைப்பு பலனை நுகர்வோருக்கு கொண்டு செல்வது தடுக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் மீது அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்று உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

இந்த விலை மாற்றப்படும் அறிவிப்பு செம்பட்பர் 30ம் தேதிவர மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x