

ஐந்து முறைகளுக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்தினால் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்னும் விதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. ரிசர்வ் வங்கி விதிமுறையின்படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களுக்கு இந்த விதி பொருந்தும். ஏ.டி.எம்-மை பயன்படுத்தி பணம் எடுப்பது மட்டுமல்லாமல், மினி ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட எந்த நோக்கத்துக்கும் ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தும்போது கட்டணம் வசூலிக்கப்படும்.
இது சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு ஆகிய அனைத்து வகையான கணக்குகளுக்கும் பொருந்தும். அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களை பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை மற்ற வங்கியின் ஏ.டி.எம்.களை மாதத்துக்கு ஐந்து முறை பயன்படுத்தலாம். இப்போது இந்த எண்ணிக்கை மூன்று முறையாக குறைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான அறிவிப்பினை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி. ஆனால் இந்த விஷயத்தில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இலவச பரிவர்த்தனை வழங்க வங்கிகள் விரும்பினால் அதற்கு தடை ஏதும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
ஆனால், சிறிய, நோ பிரில்ஸ் அல்லது எளிமையான சேமிப்பு கணக்குக்கு இந்த விதி முறைகள்பொருந்தாது. அவர்கள் மற்ற வங்கி யின் ஏ.டி.எம்.களை ஐந்து முறை பயன்படுத்தலாம். அதேபோல ஆறு மெட்ரோ நகரங்களில் இல்லாத வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்களில் ஐந்து இலவச பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். மெட்ரோ நகரங்களில் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை அதிகரித்தது, பலவிதமான பரிவர்த்தனை முறைகள் உருவாகி இருப்பது ஆகிய காரணங்களால் இந்த எண்ணிக்கையை குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆகஸ்டில் அறிவித்தது. மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் 1.6 லட்சம் ஏ.டி.எம்.கள் இருக்கின்றன.