

என்எஸ்இ கடினமான காலத்தில் இருக்கிறது என்று அந் நிறுவனத்தின் தலைவர் அசோக் சாவ்லா கூறியிருக்கிறார். பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இதைக் கூறியுள்ளார். கோ-லோகேஷன் பிரச்சினை காரணமாக நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். கடந்த திங்கள்கிழமை தொழில் நுட்ப கோளாறு காரணமாக
என்எஸ்இ சேவை மூன்று மணி நேரம் பாதிக்கப்பட்டது என பலவற்றை பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் சாவ்லா குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது:
தவறான காரணங்களுக்காக (தொழில் நுட்பகோளாறு) என்எஸ்இ செய்திகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த சூழ்நிலையை சிறப்பாக கையாண்டோம். ஏற்கெனவே பல சுமைகளுடன் நாம் இருக்கும் போது இந்த பிரச்சினை நமக்கு மேலும் ஒரு கூடுதல் சுமையாகும். கடந்த நிதி ஆண்டில் பல உச்சங்களையும் சரிவுகளையும் நாம் கண்டோம். ஆனால் இதனை நாம் சிறப்பாக கையாண்டுள்ளோம்.
முக்கிய அதிகாரிகள் வெளியேறுவது, முதலீட்டாளர்களுடனான உறவு ஆகிய சவால்களை நாம் கையாண்டு வருகிறோம். சவாலான காலகட்டத்தில் இருந்தாலும், இதிலிருந்து நாம் மீண்டு வருவோம். இந்த சவால்களை நாம் வாய்ப்புகளாக கருதி உழைக்க வேண்டும். ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றி
என்எஸ்இ-யை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் நிறுவனத்தின் துணைத்தலைவர் ரவி நாராயண் ராஜிநாமா செய்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறினார். மேலும் நிறுவனத்தின் ஐபிஓ திட்டமிட்டபடி நடக்காதது என பல சிக்கல்களை இந்த நிறுவனம் சந்தித்து வருகிறது.
என்எஸ்இ-யின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக விக்ரம் லிமயே நியமனம் செய்யப்பட்டார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொறுப்பில் இருப்பதால் என்எஸ்இ பொறுப்பை ஏற்க முடியாத சூழல் இருந்தது. ஜூலை 14-ம் தேதி வரை மட்டுமே பிசிசிஐ பொறுப்புகளில் இருப்பார். அதன் பிறகு அந்த பொறுப்புகளில் இருந்து விலகுவதால் 17-ம் தேதி (திங்கள்) என்எஸ்இ பொறுப்பை ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.