

ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட (ஐபிஓ) அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. கடந்த 17-ம் தேதி நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட இந்த முடிவை எடுத்தது. அதிகபட்சம் 20 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்ள இந்த நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,300 கோடியாக இருந்தது. தற்போதைய நிலையில் ரூ12,390 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
முன்னதாக மேக்ஸ் லைப் நிறுவனத்தை இணைக்க ஹெச்டிஎப்சி லைப் நிறுவனம் முடிவெடுத்திருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த முடிவை இரு நிறுவனங்களும் எடுத்தன. ஆனால் இந்த இரு நிறுவனங்கள் இணைவதற்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. சிக்கலான நிறுவன அமைப்பு இருப்பதால் அனுமதி வழங்க முடியாது என ஐஆர்டிஏ தெரிவித்தது.
தற்போது பங்குதாரர்களை திருப்திபடுத்த ஐபிஓ வெளியிட ஹெச்டிஎப்சி லைப் முடிவெடுத்திருக்கிறது. அதன்பிறகு இரு நிறுவனங்களை இணைவதற்கு தேவையான நடவடிகைகள் எடுக்கப்படும். ஹெச்டிஎப்சி லைப் இயக்குநர் குழு இணைவதற்கு தேவையான நடவடிக்கையை வரும் காலத்தில் எடுக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஓ குறித்து ஐஆர்டிஏவில் நிறுவனம் விண்ணப்பிக்க இருக்கிறது. இன்னும் 40 நாட்களில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு டிசம்பரில் ஐபிஓ வெளியாகலாம் என ஹெச்டிஎப்சி லைப் நிறுவனத்தின் அமிதாப் சவுத்திரி தெரிவித்தார்.
ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைப் ஒரு கூட்டு நிறுவனமாகும். இதில் ஹெச்டிஎப்சி 61.50 சதவீத பங்குகளும் ஸ்டாண்டர்ட் லைப் 35 சதவீத பங்குகளையும் வைத்திருக்கிறது.
ஹெச்டிஎப்சி லைப் நிறுவனம் ஐபிஓ குறித்து நீண்ட காலமாகவே செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனம் கடந்த ஆண்டு ஐபிஓ வெளியிட்டது. தவிர எஸ்பிஐ லைப் நிறுவனம் ஐபிஓ வெளியிட திட்டமிட்டு வருகிறது.