

பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இருக்க வேண்டும் என 2014-ம் ஆண்டில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விதியை உருவாக்கியது. இதனால் ஒரு நிறுவனத்தின் நிறுவனர் வசம் அதிகபட்சம் 75 % பங்குகளே இருக்க முடியும். இந்த விதி பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் அரசின் பங்கினை 75 சதவீதமாக குறைப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அவகாசமே இருப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே சமயத்தில் பங்குச்சந்தையில் பங்குகளை விலக்கக்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் குறைந்த விலையில் பங்குகளை விற்க வேண்டியிருப்பதால் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹட்கோ, கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் காப்பர், எஸ்.ஜே.வி.என்.எல்., எம்எம்டிசி, நெய்வேலி லிக்னைட் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களில் மத்திய அரசின் பங்கு 75 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. சரியான சமயத்தில் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலக்கிகொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு இதுவரை ரூ.7,000 அளவுக்கு பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்டி இருக்கிறது. இதில் ஹட்கோ நிறுவனத்தின் ஐபிஓ வும் ஒன்றாகும்.முன்னதாக பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் அரசாங்கத்தின் பங்கு 90 சதவீதம் இருக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் 2014-ல் இந்த வரம்பை செபி மாற்றியமைத்தது.-பிடிஐ