Published : 02 Jul 2017 11:49 AM
Last Updated : 02 Jul 2017 11:49 AM

ஜூன் மாத வாகன விற்பனை மந்தம்

சரக்கு மற்றும் சேவை வரி மீதான ஊகங்கள் காரணமாக ஜூன் மாத வாகன விற்பனை மந்தமாக இருந்தது. மாருதி சுசூகியின் விற்பனை 1.20 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. மாறாக ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் ஜூன் மாத விற்பனை சரிந்திருக்கிறது.

மாருதி சுசூகி ஜூன் மாதத்தில் 93,263 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2016-ம் ஆண்டு மே மாதத்தில் 92,133 வாகனங்கள் விற்பனையானது. அதே சமயத்தில் சிறிய ரக கார்களான ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட வாகன விற்பனை கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 7.9 சதவீதம் சரிந்தது.

எர்டிகா, எஸ்-கிராஸ் மற்றும் விடாரா வாகனங்களின் விற்பனை 43 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஆண்டு இந்த மூன்று மாடலிலும் 9,708 வாகனங்கள் விற்பனை யானது. இந்த ஆண்டு 13,879 வாகனங்கள் விற்பனையானது.

ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 5.6 சதவீதம் சரிந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 39,807 வாகனங்கள் விற்பனையாகி இருந்த சூழலில் கடந்த ஜூனில் 37,562 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்கள் அதிகம் இருந்ததால் வாகன விற்பனை குறைந்ததாக ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குநர் ராகேஷ் வஸ்தாவா கூறினார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தின் பயணிகள் வாகன விற்பனையும் 10 சதவீதம் சரிந்தது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 12,482 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 11,176 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. விற் பனை குறைந்திருப்பது தற்காலிக சூழல்தான். ஒட்டுமொத்தமாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டை பார்க்கும் போது விற்பனை 11 சதவீதம் உயர்ந்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனையும் 3 சதவீதம் குறைந்து 33,861 ஆக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி 54 சதவீதம் சரிந்திருக்கிறது. ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி, ஜைலோ, பொலிரோ மற்றும் வெரிட்டோ ஆகிய மாடல்களின் விற்பனை 5 சதவீதம் குறைந்து 16,170 ஆக இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த மாடல் கார்களின் மொத்த விற்பனை 17,070 ஆகும்.

ஆரம்பகட்ட சவால்களை கடந்துவிட்டால் ஜிஎஸ்டியால், ஆட்டோமொபைல் துறைக்கு நன்மை அதிகமாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்திருக் கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x