

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தினால் ஆட்டோமொபைல் மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது. ஆனால் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பிட்ச் அறிக்கை கூறியுள்ளது. சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
புதிய வரிவிதிப்பு முறை ஆட்டோமொபைல், சிமெண்ட் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. ஆனால் எண்ணெய் மற்றும் எரிவாயு, சிறு குறு தொழில் துறைக்கு பாதகமான சூழலை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் ரியல் எஸ்டேட், மின்சாரம், தொலைத் தொடர்பு, மருந்து உற்பத்தி மற்றும் உர உற்பத்தி துறைகளில் நடுநிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் அடுத்த 12 மாதங்களுக்கு சிரமங்கள் நீடிக்கும் என்றும், புதிய வரி முறைக்கு மாறுவதில் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பல சிக்கல்கள் உருவாகும் என்றும் கூறியுள்ளது.
ஜிஎஸ்டி சட்டம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே இருந்த 17 வரிகளுக்கு மாற்றாக ஒரே வரியாக கொண்டுவரப்பட்டது. பெரு நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் சவால்கள் இருந்தாலும் உடனடியாக ஏற்றுக் கொண்டனர். இந்த ஜிஎஸ்டி வரிச் சட்டத்தில் உள்ளீட்டு வரி வரவுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு பெரு நிறுவனங்களுக்கு மட்டும் சாத்தியமாகியுள்ளது.
சிறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவுக்கு விண்ணப்பிப்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். விநியோக சங்கிலியில் உள்ள நிறுவனங்களும் இதை குறிப்பிட்ட அளவில்தான் பயன்படுத்த மட்டுமே வாய்ப்புள்ளது. வலிமையான பொருளாதார பலம் கொண்ட பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்றும் பிட்ச் கூறியுள்ளது.