இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 8 லட்சம் கோடி டாலராக உயரும்

இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 8 லட்சம் கோடி டாலராக உயரும்
Updated on
1 min read

இந்தியாவின் ஜிடிபி மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி டாலராக உயரும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பனகாரியா இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

அடுத்த 15 ஆண்டுகளில் ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சி அடையும் பட்சத்தில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 15 லட்சம் கோடி டாலராக உயரும். மேலும் இந்த வளர்ச்சி இருக்கும்பட்சத்தில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முடியும். தவிர இந்த வளர்ச்சி இருக்கும்போது மேற்கு நாடுகளில் இருக்கும் வாழ்க்கைத்தரம், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

தற்போது, உலகின் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. டாலர் மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கிறது. தற்போது இந்தியாவின் ஜிடிபி 2.3 லட்சம் கோடி டாலராக இருக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு 8 சதவீத வளர்ச்சி என்று வைத்துக்கொண்டாலும் கூட அடுத்த 15 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி டாலராக உயர வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் நடைபெறவில்லை. குறிப்பாக 2009 முதல் 2014 வரையிலான காலத்தில் அதிக தவறுகள் நடந்தன. இந்த காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி 8.3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக சரிந்தது.

ஏற்கெனவே இருக்கும் சில பிரச்சினைகளின் தொடர்ச்சி தற்போதும் இருக்கிறது. குறிப்பாக வங்கிகளின் வாராக்கடன். ஆனால் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. பணவீக்கம் குறைவாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கிறது. பொதுவாக தற்போதைய இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது.

தவிர சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்டம், ஆதார் சட்டம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதனுடைய பலன்கள் தற்போதுதான் தெரியத் தொடங்கி இருக்கின்றன.

சீனாவில் நகர மேயர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும். அதுபோல இந்தியாவில் மாநில முதல்வர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கருத்தரங்கில் பொருளாதார வல்லுநர் ஜெகதீஷ் பகவதி, தலைமை புள்ளியியல் அதிகாரி டிசிஏ ஆனந்த் மற்றும் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in