Published : 08 Nov 2014 09:03 AM
Last Updated : 08 Nov 2014 09:03 AM

கற்றது கைமண் அளவு, கல்லாதது கடத்தல் மண் அளவு!

இது கற்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, கம்பெனிகளுக்கும்தான். வளரவேண்டும், வளர்ச்சி வேண்டும் என்று வாய் கிழிய பேசும் நிர்வாகங்கள் கம்பெனிகளைக் கற்கும் கம்பெனி களாக்குவதில்லை.

புதிய படிப்பினைகளைப் பெற்றால்தான் பழைய பஞ்சாங்கத்தைக் கட்டிகொண்டு மாரடிக்க வேண்டியதில்லை. பிரச்சினைகளைத் தீர்ப்பதில், புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில், செயல்முறைகளில் மாற்றங்கள் புரிவதில் புதுமைகளை வரவேற்பதில் கம்பெனிகள் தயாராக இருக்கவேண்டும். இதை பல கம்பெனிகள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் அதற்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்வதில்லை.

கட் த்ரோட் காம்பெடிஷன் உலகில் கம்பெனிகள் ’கற்கும் கம்பெனிகளாக’ (Learning Organizations) மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கிறார் ’டேவிட் கார்வின்’. ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவியூ’வில் ‘Building a Learning Organization’ என்ற கட்டுரையில் இதை செய்ய மூன்று ’M’கள் முக்கியம் என்று விளக்குகிறார்.

அர்த்தம் (Meaning)

புதிய அறிவை பரவலாகப் பெற்று, திறனுடன் அதை உருவாக்கி, அதை தனக்குள் தெளிவாக உள்வாங்கி அதற்கேற்ப தன் செயல்களில் சதா மாற்றங்கள் செய்து வரும் கம்பெனியே கற்கும் கம்பெனி என்கிறார் கார்வின்.

கற்கும் கம்பெனியின் அடிநாதம் புதிய ஐடியாக்கள். இவை சட்டென்று உதிக்கலாம், போட்டியாளரிடமிருந்து வரலாம், மற்றவர்களிடமிருந்து பெறலாம். ஐடியாக்களை பெற்றால் மட்டும் போறாது. அதை ஏற்று உள்வாங்கி செயல்படுத்தும் வகையில் கம்பெனியின் செயல்பாடுகள் இருக்கவேண்டும். ஐடியாக்கள் ஃப்ளூக்கில் கிடைக்குமா என்று கற்கும் கம்பெனிகள் பார்க்காமல் கட்டம் கட்டி, திட்டம் போட்டுத், தோண்டித் துருவி, தேடிப் பிடிக்கும் வகையில் தங்களை தயார்படுத்திக்கொள்கின்றன.

வழிமுறை (Management)

கற்கும் கம்பெனிகள் ஐந்து அம்சங்களில் சிறந்து விளங்குகிறது என்கிறார் கார்வின். இதற்குத் பிரத்யேக மைண்ட் செட் மற்றும் ஸ்கில் செட் தேவை. இந்த ஐந்து அம்சங்களையும் கம்பெனியின் செயல்பாட்டின் ஒவ்வொரு அசைவுடன் இணைத்தால் கம்பெனிகள் புதியதை ஏற்பதும், கற்பதும் எளிதாகும்.

திட்டமிட்டு பிரச்சனைகளைத் தீர்ப்பது

பல நிர்வாகங்கள் அனுமா னத்தின் பெயரில் பிரச்சினையைத் தீர்க்கிறார்கள். அதனாலேயே பல தவறுகள் நடக்கின்றன. திட்டமிட்டு டேட்டாவின் துணை கொண்டே தீர்க்கமான முடிவுகள் எடுக்கவேண்டும். இதற்கு ‘ஃபேக்ட் பேஸ்ட் மானேஜ்மெண்ட்’ என்று பெயர்.

பிரச்சினையின் ஆதார காரணத்தை அறிவியல் பூர்வமாய் ஆராய்ந்து அதனை சரி செய்ய தேவையான டேட்டாவை பல முறை சரிபார்த்து செயல்படும் போதே கம்பெனி கற்கும் கம்பெனியாகிறது. குவாலிடி நிபுணர் எட்வர்ட் டெமிங் கூறியது போல் ‘திட்டமிடு, செய்திடு, சரிபார்திடு, செயல்படு’.

எக்ஸ்பெரிமெண்டேஷன்

புதிய சிந்தனைகளை தேடிப் பெற்று பரிசோதித்துப் பார்ப்பதும் கற்கும் கம்பெனி செய்யவேண்டிய செயல்களில் ஒன்று. இதை இரு வகையில் செய்யலாம். கம்பெனியின் செயல்பாடுகளில் முடிந்தவரை புதியதை புகுத்தி கொண்டே இருந்து அதன் தன்மைகளை, அதன் பயன்களை ஆராய்வது ஒரு வகை. இதை செய்ய சில கம்பெனிகள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு நிர்வாகிகளை மற்ற பொருள் வகை பிரிவு கம்பெனிகளுக்கோ, வெளி நாடுகளுக்கோ, ஆராய்ச்சி மையங்களுக்கோ அனுப்பி அங்கிருந்து புதியதை கற்று, பெற்று வர அனுப்பலாம்.

மற்றொரு வகை டெமான்ஸ்ட்ரேஷன் ப்ராஜக்ட்ஸ். கம்பெனியின் குறிப்பிட்ட ஒரு பிரிவிலோ, துறையிலோ பழையதை முழுவதுமாக மாற்றி புதிய முறைகளை அறிமுகப்படுத்தி அதன் பயன்களை ஆராய்வது. திட்டமிட்ட பயன்களை புதிய முறை அளிக்குமானால் அதையே கம்பெனி முழுவதும் அறிமுகப்படுத்த முடியுமா என்று நிர்வா கங்கள் ஆராயலாம்.

அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வது

‘தன் தவறை திருத்திக் கொள்ளாதவன் அதே தவறை மீண்டும் செய்ய விதிக்கப்படுவான்’ என்றார் தத்துவமேதை சண்டாயனா (Santayana). நிர்வாக மும், ஊழியர்களும் தங்கள் வெற்றிகளையும் தோல்விகளையும் அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அதிலிருந்து பெற்ற பாடங்களை புரிந்துகொண்டு மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டும். புரிந்த தவறுகளிலிருந்துதான் புதிய இன்சைட் கிடைக்கும். புதிய இன்சைட் மூலம் தான் புதிய வழி புலப்படும். புதிய வழியிலிருந்தே புதிய வெற்றிகள் பெறமுடியும்.

ஒரு முறை ‘ஐபிஎம்’ கம்பெனி ஊழியர் ஒருவரின் தவறான முடிவால் கம்பெனிக்கு ஒரு கோடி டாலர் இழப்பு ஏற்பட அவர் குற்ற உணர்ச்சியுடன் தன் ராஜினாமா கடிதத்தை உரிமையாளர் தாமஸ் வாட்ஸனிடம் தந்தார். அதற்கு வாட்ஸன் ‘என்ன விளையாடுகிறாயா. உனக்கு புதிய பாடம் கற்றுத்தர கம்பெனி இப்பொழுதுதான் ஒரு கோடி டாலர் செலவழித்திருக்கிறது. உன்னையாவது விடுவதாவது.

இனி இந்தத் தவறை நீ ஆயுசுக்கும் செய்யமாட்டாயே. இந்தப் பாடத்தை ஐபிஎம் உனக்கு கற்றுத் தந்து அதன் பயனை வேறொரு கம்பெனி ஏன் பெற வேண்டும்’ என்று கூறி ராஜினாமா கடிதத்தை கிழித்து போட்டு ‘போய் வேலைய பாருப்பா’ என்றாராம். இந்த அணுகுமுறையே கற்கும் கம்பெனிகளுக்கு ஆதாரமா னதாகும்.

மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது

புதிய அறிவை எங்கிருந்தும் பெறலாம். பெறவேண்டும். ‘புதிய ஐடியாக்களை, அறிவை கூச்சப்படாமல் திருடவும் செய்ய லாம்’ என்கிறார்கள் வல்லுனர்கள். வேண்டுமானால் சில தமிழ் பட டைரக்டர்களை கேட்டுப் பாருங்கள். ’இதிலெல்லாம் வெக்கத்த பாத்தா முடியுமா பாஸு’ என்பார்கள் கூச்சமில்லாமல்!

இதற்குத் தேவை ‘பென்ச்மார்க்கிங்’. தொழிலின் ஒவ்வொரு அங்கத்தையும் பிரித்து ஒவ்வொன்றிலும் சிறந்து விளங்கும் கம்பெனிகளின் செயல்பாடுகளை, பெஸ்ட் ப்ராக்டிசஸ்களை சுவீகரித்து அவர்கள் அளவிற்கு ஒவ்வொரு அம்சத்தில் சிறந்து விளங்க செய்யும் முயற்சியே பென்ச்மார்க்கிங். இதை சிறப்பாய் செய்ய ‘எங்கிருந்தும் கற்கலாம்’ என்கிற கலாசாரத்தை கம்பெனி முழுவதும் பரப்புவது அவசியம்.

பெற்ற அறிவை பகிர்ந்து கொள்வது: ‘கண்டோம், பெற் றோம், கற்றோம்’ என்றில்லாமல் கம்பெனியின் ஒவ்வொரு அங்கமும் தாங்கள் பெற்ற புதிய அறிவை, புதுமைகளை கம்பெனியெங்கும் பரப்ப வேண்டும். ந்யூஸ்லெட்டர், இண்டர் டிபார்ட்மெண்ட் மீட்டிங்ஸ், இண்டர் டிபார்ட்மெண்ட் ட்ரான்ஸ்ஃபர், மாதாந்திர ரிப்போர்ட்ஸ், புதுமைக்கான விருதுகள் போன்ற வற்றின் மூலம் அறிவு பகிர்தல் சாத்தியப்படுகிறது.

மதிப்பீடு (Measurement)

புதுமைகளை கம்பெனிகள் கற்க மூன்று படிகள் முக்கியம். புதிய ஐடியாக்களை ஊழியர்கள் பார்த்து தெரிந்து, புரிந்து கொள்வது முதல் படி. அதை உள்வாங்கி தங்கள் செயல்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது இரண்டாவது படி. செயல்பாட்டில் முன்னேற்றம் அடைந்து பாசிடிவான ரிசல்ட் தெரிவது மூன்றாவது படி. இந்த மூன்று படிகளையும் தெளிவாய் தெரிந்து கொள்ள கம்பெனி செய்யவேண்டியது ‘லர்னிங் ஆடிட்.’ ஊழியர்களிடம் சர்வே நடத்துவது, இண்டர்வியூ செய்வது, நேரடியான மேற்பார்வை போன்றவை மூலம் கம்பெனி இந்த ஆடிட்டை செய்யலாம். துறை சார்ந்த நிபுணர்கள், ஆலோசகர்கள் மூலம் ஐடியா சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்று மதிப்பீடு செய்யலாம்.

அரச மரம் சுற்றி அடிவயிற்றை தொட்டுப் பார்த்தால் ஒரு எழவும் நடக்காது. கற்கும் கம்பெனியை ஒரே இரவில் உருவாக்க முடியாது. முதல் வேளையாக கம்பெனி முழுவதும் கற்க ஏதுவான சூழ்நிலை உருவாக்கவேண்டும். புதிய சிந்தனை, ஐடியா வளர ஊழியர்களுக்கு நேரம், சுதந்திரம் தரவேண்டும். புதிய ஐடியா பிரயோகிக்கும் போது தவறு நேர்ந்தால் தட்டிக் கேட்கப்படாமல், தட்டி கொடுத்து உற்சாகப்படுத்தும் நிர்வாகம் வேண்டும். டிபார்ட்மெண்ட் எல்லைகள் கம்பெனியை கட்டுப்படுத்தாமல் டிபார்ட்மெண்டுகள் சேர்ந்து செயலாற்றும் கலாச்சாரம் வேண்டும். தடையில்லா உலகில் கம்பெனிக்குள் தடை இல்லாமல் செய்வது நிர்வாகத்தின் கடமை.

நெருக்கும் காம்பெடிஷன் உலகில் முடிவில்லா கற்கும் கம்பெனியே முடிசூடா விற்கும் கம்பெனியாக நிற்க முடியும்!

satheeshkrishnamurthy@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x