

நுகர்பொருள் விற்பனையில் முன்னணியில் விளங்கும் இமாமி நிறுவனம் தனது விளம்பரத்துக்கு ரூ.443 கோடி செலவிட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் கதாநாயகிகள் உள்பட 27 பேரை தனது தயாரிப்புகளின் விளம்பரங்களில் பயன்படுத்தியுள்ளது.
2016-17-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 17.5 சதவீதத்தை விளம்பரங்களுக்கு செலவிட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பெரும்பாலான நிறுவனங்கள் விளம்பர செலவைக் குறைத்த நிலையில் இமாமி தாராளமாக விளம்பரங்களுக்கு செலவிட்டுள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இமாமி நிறுவனம் தனது தயாரிப்பான நவரத்தினா கூல் டாக், நவரத்தினா எண்ணெய், கேஷ் கிங், போரோ பிளஸ், ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம், ஜன்டு பாம் உள்ளிட்ட தயாரிப்புகளை பிரபலப்படுத்த பாலிவுட் நடிகர்களை பயன்படுத்தியுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் (2015-16) இந்நிறுவனம் விளம்பரத்துக்கு ரூ. 430 கோடியை செலவிட்டிருந்தது. கடந்த நிதி ஆண்டு இது சற்று அதிகரித்து ரூ. 443 கோடியைத் தொட்டுள்ளதாக நிறுவனத்தின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
ஹிருத்திக் ரோஷன், கங்கனா ரணாவத், ஷாகித் கபூர், மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா, கரீணா கபூர் கான், ஷில்பா ஷெட்டி, ஸ்ருதி ஹாசன், பிரினிதிசோப்ரா, யாமி கௌதம், சோனாக்ஷி சின்ஹா, தப்சி பன்னூ, பிபாஷா பாசு, ஜூனியர் என்டிஆர், சூர்யா, ஹியூமா குரேஷி ஆகியோரும் இந்நிறுவன விளம்பரங்களில் தோன்றியுள்ளனர்.
விளையாட்டு வீரர்களில் மீல்கா சிங், சவுரவ் கங்குலி, எம்.எஸ். தோனி, சானியா மிர்ஸா, சானியா நேவால், மேரி கோம், சுஷில் குமார் ஆகியோரும் கதக் நடன கலைஞர் பண்டிர் பிர்ஜு மகராஜ் ஆகியோரும் இமாமி விளம்பரங்களில் தோன்றியுள்ளனர். கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 2,532 கோடியாகும். முந்தைய ஆண்டு (2016-16) இது ரூ. 2,397 கோடியாக இருந்தது.