Last Updated : 28 Jul, 2017 09:17 AM

 

Published : 28 Jul 2017 09:17 AM
Last Updated : 28 Jul 2017 09:17 AM

வணிக நூலகம்: மிகச்சிறந்த தலைவர்களின் பாணி

எவ்வளவு தான் எழுதினாலும் பேசினாலும் படித்தாலும் தலைமை என்னும் தலைப்பு சலிப்பை ஏற்படுத்தாது. அந்த வகையில் பாட்ரிக் லென்சியோனி (PATRICK LENCIONI) எனும் நூலாசிரியர் எட்டு புத்தகம் எழுதி அதில் நான்கு புத்தகத்திற்கு மேல் தலைமை பண்புகளை பற்றி வெவ்வேறு விதமான கருத்துகளை கூறியுள்ளார். மூன்றாவதாக எழுதிய இந்த புத்தகத்தை தலைமைக்கு தொல்லை தரும் அல்லது தலைமையை ஆட்டிபடைக்கும் நான்கு காரணிகளை பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்தை படிக்கும் பொழுது சிறிது வெளியில் சென்றுவிட்டதை போன்று ஒரு உணர்வு தோன்றும் ஆனால், மொத்தமாக உள்வாங்கி கீழே கொடுக்கப்பட்டுள்ளதை போல மாற்றி புரிதலை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் பயனுள்ள புத்தகம்.

சிறிய நடுத்தர, பெரிய நிறுவனங்கள் ஆனாலும் நிறுவனங்கள் இல்லாத இடங்களில் தலைமை ஏற்பவர்களும் எவ்வாறு தொல்லை தரும் காரணிகளில் வெற்றி அடைந்து தலைமைக்கு ஒரு புதிய முகத்தை கொடுக்கிறார்கள் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

தலைசிறந்த தலைவர்களை ஆட்டிபடைக்கும் நான்கு காரணிகள் வருமாறு

1. நெருக்கமான தலைமை குழுவை உருவாக்கி தற்காத்தல்

2. நிறுவனங்களில் தெளிவை ஏற்படுத்துதல்.

3. நிறுவனங்களில் தெளிவை ஏற்படுத்த அதிக அளவில் கருத்து பரிமாறுதல்.

4. மனித வளத்தின் மூலம் நிறுவனங்களில் தெளிவை வலுப்படுத்துதல்

நெருக்கமான தலைமை குழுவை உருவாக்கி தற்காத்தல்

கட்டுக்கோப்பான நெருக்கம் மிகுந்த தலைமை குழுவை உருவாக்குதல் சாதாரண வேலை அல்ல. ஒவ்வொருவருடனும் தன்னை எளிதாக இணைத்துக் கொண்டு அவர்களின் நம்பிக்கையை பரிசாக பெற்று சந்தேகம் ஏற்படாத வண்ணம் செயல்படுதல் மிகவும் சிறப்புடையது. நிறுவன அரசியல் தேவையற்ற குழப்பங்கள், விரையம் ஆகும் வீரியம் ஆகியன இல்லாத சூழ்நிலை நலம் தரும்.

அடுத்தவர்களின் இலக்கு அடையும் திறனை அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியில் ஈடுபடுத்துவது விவேகம். நெருக்கம் ஏற்படுத்துவதற்கு அடிக்கடி கூடுவது அவசியம். கடினமான கேள்விகளும், குழப்பமான முடிவுகளும், தெளிவில்லா நிலைபாடுகளும் அடிக்கடி கூடுவதாலும் நம்பிக்கையோடு பரிமாறிக் கொள்வதாலும் நெருக்கத்தை ஏற்படுத்தி தலைமைக்கு வலுசேர்க்கும்.

கொள்கைகளுக்கான பேச்சுவார்த்தைகள் சிறந்தது. தனிநபரோ அல்லது ஆளுமைகளை பற்றிய கருத்து பரிமாற்றம் தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும். கூட்ட முடிவில் வெளியில் சொல்ல முடியாத வெறுப்போடு யாரும் வெளியேறா வண்ணம் பார்த்துக்கொள்ளுதல் தலைமைக்கு அழகு.

நிறுவனங்களில் தெளிவை ஏற்படுத்துதல்.

நிறுவனங்களில் தெளிவை ஏற்படுத்துதல் பணியாளர்களை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஒன்றிணைப்பதால் தெளிவான இலக்கும் திறமையும் வெளிப்படுகிறது. ஈடுபாடும், தைரியமும் கூடும். இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்கி நிறுவன முடிவுகளுக்கு தங்களையும் அர்பணிப்பார்கள். தாங்களாக எடுக்கும் முடிவுகள் மூலம் தங்களுக்கு அதிகாரம் அளித்ததை உணர்ந்து முடிவுகளை மேம்படுத்துவார்கள். நிறுவனங்களில் தெளிவு ஏற்படுத்துவதற்கு கீழ் காணும் ஆறு கேள்விகள் அவசியம்.

1. எதற்காக நிறுவப்பட்டு உலகில் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?.

2. மாற்ற முடியாத மதிப்புகளை அடிப்படையாக கொண்டிருக்கிறதா?.

3. எந்த வியாபாரம் அல்லது தொழிலில் நிறுவனம் ஈடுபடுகிறது?.

4. போட்டியாளர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறோம்?.

5. இலக்குகள் மாதம், காலாண்டு, முழுஆண்டு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த எந்த வகையில் வேறுபட்டு அதிகரிக்கிறது?.

6. மேல் சொன்ன இலக்குகளை எப்படி சாதிக்கிறார்கள்?.

கேள்விகள் வெறுமையான வார்த்தைகளாக மட்டும் இல்லாமல் அவைகளுக்கு அர்த்தத்தைக் கொடுக்கும் பொழுதுதான் விளைவுகள் வேகமாக நடைபெறுகின்றன. விடைகள் இல்லாத சூழ்நிலையில் நிறுவனம் குழப்பத்திலும், தயக்கத்திலும், பிற நிறுவனங்களின் கபளீகரத்திலும் காணாமல் போய்விடும். அவ்வாறு தொலைந்து போகும் நிறுவனங்களின் தலைவர்களும் தொலைந்து போவார்கள்.

நிறுவனங்களில் தெளிவை ஏற்படுத்த அதிக அளவில் கருத்து பரிமாறுதல்

பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சொல்லப்படும் கருத்துகளை பணியாளர்கள் எளிதில் பின்பற்றுவார்கள். சில நேரங்களில் ஒரே முறை சுருக்கமாக கூறப்படும் கருத்துகளை பணியாளர்கள் தவறாக புரிந்துக் கொள்வதற்கும் வித்தியாசமாக செயல்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. வளமான நிறுவனங்களில் பணியாளர்கள் தகவல் மற்றும் கருத்துகளை நிறைவாக பெரும் பொழுது ஈடுபாடு ஏற்படுகிறது.

எளிதான செய்திகள் குழப்பம் இல்லாத வகையில் எடுத்து சொல்லும் பொழுது நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. பணியாளர்கள் தங்களுடைய நிலையில் இருந்து எளிதில் புரிந்துக்கொள்ளும் போது அது வேறு வகையான தாக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்தும். நிறுவனத்தின் பயண விவரம், தூரம், எவ்வாறு எந்த இடத்திற்கு எந்த எந்த காலங்களில் சென்று சேர வேண்டிய செய்தியை வெளிப்படையாக அறிந்துக் கொள்ளும் போது பணியாளர்கள் மனதில் குழப்பம் காணாமல் போய்விடும்.

ஒரே முறையில் அல்லது ஒரே உத்தியில் செய்திகளை பகிர்ந்துக் கொள்ளாமல் பல வகையிலும், புதுமையான முறையிலும் பணியாளர்களை சென்று அடையும் போது அது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இன்றைய காலக்கட்டத்தில சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் நிறம் மாறிய காகிதத்தில் நிறைய கருத்துகளோடு வரும் சுற்றறிக்கைக்கு இருப்பது இல்லை.

மனித வளத்தின் மூலம் நிறுவனங்களில் தெளிவை வலுப்படுத்துதல்

தேவையில்லாத அதிகார மையங்களும், அதிகாரம் மிக்க வெளிப்பாடு உடைய செய்திகளும், தெளிவில்லாத கருத்துகளும் மிகப்பெரிய தொல்லைகளை உருவாக்கும். சிறந்த தலைமை இவைகளை கருத்தில் கொள்ளுதல் அவசியம். மிகப்பெரிய சவாலே தேவையில்லாத அதிகார வரம்புகளை மட்டுப்படுத்துவதும், நிறுவனங்களை விட்டு விலக்குவதும் ஆகும். நிறுவனங்களில் செயல்பாடுகளும், முறைகளும் புரிந்துக்கொள்ளும் வகையில் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

எந்த நிறுவனத்தில் மனிதம் சார்ந்த முறைகளும் நிறுவன வளர்ச்சியும் முன்வைக்கப்படுகிறதோ அந்த நிறுவனம் மாற்றங்கள் ஏற்படும் காலங்களிலும் மாறாமல் நிலைத்து நிற்கும். பணியாளர்களை பணியமர்த்துல், மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல், வெகுமதி அளித்தல் பாராட்டுதல் ஆகியன தொடர்புடையவையாகவும் தொடர்ந்து நடந்தேர வேண்டும். தோன்றும் பொழுது ஏற்படுத்தக் கூடிய முறைகளும், செயல்படுகளும் தொடர்ச்சி இல்லாமல் வெட்டி விடப்படும் பொழுது சுற்றி இருக்கும் பணியார்கள் குழப்பமும் வெறுப்பும் அடைகிறார்கள்.

நிலைத்தன்மையும் அந்த நிலைத்தன்மை மேற்கூறிய காரணிகளிலும் தென்படும் பொழுது நிறுவனங்களில் தெளிவும் பணியாளர்களின் பங்களிப்பும், தலைமைக்கு தொல்லை இல்லாமலும் இருப்பதை காண்கிறோம்.

இந்த நான்கு காரணிகளும் நிறுவனங்களை வழிநடத்தி தலைமையை தனிவழியில் நடத்தி வெற்றிக்கு உதவும் என்பதை உறுதியாக கூறமுடியும். தலைமைக்கு ஏற்படும் தொல்லைகள் விலக வேண்டுமானால் இந்த நான்கும் சரியான முறையில் நிறுவனத்தின் பயன்பாட்டில் சேர்க்கப்பட வேண்டும். மிக சிறந்த தலைமை பண்புள்ளவர்கள் நிறுவனத்தின் நலத்தை பேணுவதற்கு இவைகளை வெகுவாக பயன்படுத்தி வெற்றியடைந்த கதைகள் நிறைய உண்டு.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x