Published : 01 Jul 2017 11:40 AM
Last Updated : 01 Jul 2017 11:40 AM

ஜிஎஸ்டி: 17 ஆண்டு கால போராட்டம்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தற்போது அமலாகிவிட்டது. இதன் சாதக பாதகங்கள் முழுமையாக தெரிவதற்கு இன்னும் சில நாட்களாவது ஆகும். ஆனால் ஜிஎஸ்டி கடந்த வந்த பாதை மிக நெடியது. பல நிதி அமைச்சர்கள், பல குழு கூட்டங்களுக்கு பிறகு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 2000-ம் ஆண்டு ஜிஎஸ்டிக்கான முதல் விவாதம் தொடங்கியது.

ஜிஎஸ்டி கடந்த வந்த பாதை இதோ.

> பிப்ரவரி 1986 பொது பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் விஸ்வநாத் பிரதாப் சிங் வரி அமைப்பை மாற்றுவதற்கு முன்மொழிந்தார்.

> 2000 பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் புதிய வரி அமைப்பு முறையை அறிமுகப்படுத்தினார். மேற்கு வங்க நிதியமைச்சர் அசிம் தாஸ்குப்தா தலைமையிலான குழு ஜிஎஸ்டி அமைப்பை வடிவமைத்தது.

> 2003 வரி சீர்த்திருத்தம் செய்வதற்காக விஜய் கேல்கர் தலைமையில் ஒரு குழுவை வாஜ்பாய் அரசாங்கம் நியமித்தது.

> 2004 நிதியமைச்சக ஆலோசகர் விஜய் கேல்கர் பழைய வரி அமைப்புக்கு பதிலாக புதிய ஜிஎஸ்டி வரி அமைப்பை அமல்படுத்த பரிந்துரைத்தார்.

> பிப்ரவரி 28, 2006 முதன்முறையாக பட்ஜெட் உரையில் ஜிஎஸ்டி பற்றி கூறப்பட்டது. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கு 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்தார்.

> ஏப்ரல் 30, 2008 `சரக்கு மற்று சேவை வரிக்கான மாதிரி வரைவு’ என்ற தலைப்பில் அறிக்கையை அதிகாரமளிக்கபட்ட மாநில நிதியமைச்சர்கள் குழு வழங்கியது.

> 2009 நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அசிம் தாஸ்குப்தா வடிவமைத்த ஜிஎஸ்டி அடிப்படை அமைப்பை குறித்து தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்த பாஜக ஜிஎஸ்டியை எதிர்த்தது.

> பிப்ரவரி 2010 ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கு வசதியாக மத்திய நிதியமைச்சகம் மாநிலங்களில் வசூலிக்கப்படும் வணிக வரி முழுவதையும் கணினிமயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

> மார்ச் 22, 2011 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜிஎஸ்டி தொடர்பான 115-வது சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. பிரணாப் முகர்ஜி ஜிஎஸ்டியை 2011 ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

> பிப்ரவரி 2013 ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கு 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

> ஆகஸ்ட் 2013 நாடாளுமன்ற நிலைக்குழு ஜிஎஸ்டி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஜிஎஸ்டி மசோதா தயாராக இருந்தது.

> அக்டோபர் 2013 குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி ஜிஎஸ்டி மசோதாவை எதிர்த்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தினால் குஜராத் மாநிலத்துக்கு ரூ.14,000 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

> 2014 ஜிஎஸ்டி மசோதாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் மக்களவையில் மசோதா நிலுவையில் இருந்தது. பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது.

> டிசம்பர் 19, 2014 நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

> பிப்ரவரி 2015 ஜிஎஸ்டியை அமல்படுத்த ஏப்ரல் 1-ம் தேதி, 2016 காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது.

> மார்ச் 6, 2015 ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

> மார்ச் 12, 2015 சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவை செயற்குழுவுக்கு சட்டத்திருத்த மசோதாவை அனுப்ப காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது.

> மார்ச் 14, 2015 மக்களவை மற்றும் மாநிலங்களவை இணைப்பு குழுவுக்கு ஜிஎஸ்டி மசோதா அனுப்பப்பட்டது.

> ஆகஸ்ட் 2015 மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் ஆதரவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் பெறமுடியவில்லை.

> ஆகஸ்ட் 2016 சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

> ஆகஸ்ட் 3, 2016 மாநிலங்களவையில் ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

> செப்டம்பர் 2, 2016 16 மாநிலங்கள் ஜிஎஸ்டி மசோதவை நிறைவேற்றியதால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

> செப்டம்பர் 12, 2016 மத்திய அமைச்சரவை ஜிஎஸ்டி கவுன்சிலை அமைப்பதற்கு உத்தரவு அளித்தது.

> செப்டம்பர் 22, 2016 ஜிஎஸ்டி கவுன்சில் முதல் கூட்டம் கூடியது.

> நவம்பர் 3, 2016 5%, 12%, 18%, 28% என நான்கு வித வரி அமைப்பை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக் கொண்டது.

> ஜனவரி 1, 2017 ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கு ஜூலை 1-ம் தேதி என்று காலக்கெடுவை அருண் ஜேட்லி நிர்ணயித்தார்.

> மார்ச் 20, 2017 சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, யுடிஜிஎஸ்டி மற்றும் இழப்பீடு மசோதாவுக்கு அமைச்சரவ ஒப்புதல் அளித்தது.

> ஜூன் 21, 2017 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர மாநில ஜிஎஸ்டி மசோதாவை அமல்படுத்தியது.

> ஜூன் 28, 2017 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜிஎஸ்டி அறிமுக விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்தார்.

> ஜூன் 29, 2017 ஜிஎஸ்டி அறிமுக விழாவை காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்தன.

> ஜூன் 30, நள்ளிரவு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x