

தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய தொழில் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று சிஐஐ தலைவர் ஷோபனா காமினேனி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 1991-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் தொழில் கொள்கையில் பெரிதாக மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது தொழில் சூழல் மாறியிருக்கிறது. இ-காமர்ஸ், ஆன்லைன், தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் வளர்ந்து வருகின்றன. உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சியிலிருந்து தற்போது சேவைகள் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு மாறிக் கொண்டு இருக்கிறோம். இந்த மாற்றத்துக்கு ஏற்ப புதிய தொழில் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
வங்கிகளின் வாராக் கடன் தொழில் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதைத் தீர்க்க வேண்டும். மேலும் புதிய தொழில் நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன்களை எதிர்பார்க்கின்றன. புதிய தொழில்கள் வளர வேண்டுமானால் வங்கிகள் கடன் அளிக்க முன்வர வேண்டும்.
இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தம் மிக முக்கிய பங்காற்றும். இதனால் வரி அமைப்பு பெரியதாகும். மேலும் தொழில் புரிவது எளிதாகும். முக்கியமாக மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் எளிதாகும்.
வறட்சி மேலாண்மை, தொழில் புரிவதற்கு எளிதான சூழலை உருவாக்குவது, வேளாண்மை குறித்த தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம். மேலும் சிறப்பு கூட்டங்கள் நடத்தவும் தமிழக அரசுடன் பேசி வருகிறோம்.
தற்போது வேலைவாய்ப்பு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சிஐஐ ஆய்வுபடி ஒரு வருடத்துக்கு 1.2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் வேலை வாய்ப்பில் ஆண்-பெண் வேறுபாடு அதிகமாக இருக்கிறது. இதை களைவதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்களோடு இணைந்து எடுத்து வருகிறோம்.
தற்போது இந்தியாவின் அனைத்து பொருளாதார சூழல்களும் சாதமாக இருக்கிறது. பணவீக்கம் குறைவாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்து வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வலுவாக இருக்கிறது. இப்படி பல பொருளாதார காரணிகள் சாதகமாக இருக்கின்றன. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். இதற்கான வழிமுறைகளைத் தொழில் நிறுவனங்களோடு இணைந்து சிஐஐ ஆலோசித்து வருகிறது. இவ்வாறு ஷோபனா காமினேனி தெரிவித்தார்.