

தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் 1,200 -த்துக்கும் மேற்பட்ட சட்டங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார்.
முதலீட்டாளர்கள் தொழில்முனைவோர்கள்,ஸ்டார்ட்அப் மற்றும் சிறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்ட `தொழில்முனைவோர் இந்தியா 2017’ என்கிற கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப் காந்த், சுமார் 1200 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் தொழில்முனைவு மற்றும் நாட்டின் தொழில்வளர்ச்சியில் மாற்றம் உருவாகும். இதற்கு முன்பு இருந்த சுமார் 1,200 சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாற்றியமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது.
தற்போது தொழில் தொடங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில்களை ஒருவர் ஐந்து நிமிடத்தில் பதிவு செய்து விடலாம். திவால் மசோதா மற்றும் ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதன் மூலம் ஒருவர் இந்தியாவில் எந்த இடத்திலும் எளிதாக தொழிலை மேற்கொள்ள இந்த சட்டங்கள் உதவியாக இருக்கும்.
மத்திய அரசு இளம் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் பொது நிதியை உருவாக்கியுள்ளது. இதனால் தொழில் முனைவோர்களுக்கான நிதி தேவைகள் எளிதாக அணுக முடியும். ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் வெளியிலிருந்து நிதி திரட்டுவது சாத்தியமாகும்பட்சத்தில், ஸ்டார்ட் அப் சூழ்நிலை மேம்படும் என்றும் கூறினார்.