Published : 25 Jul 2017 08:12 AM
Last Updated : 25 Jul 2017 08:12 AM

வங்கி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா

வங்கி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். இதன் மூலம் வங்கிகள் தங்களது வாராக்கடன் பிரச்சினைக்கு தாங்களாகவே முடிவெடுக்கும் அதிகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம் அறிவித்தபடி வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக ‘வங்கி ஒழுங்குமுறை 2017 திருத்த மசோதா’ அறிமுகம் செய்யப்படுவதாக ஜேட்லி கூறினார்.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி குறிப்பிட்ட வாரக்கடன் சொத்துகள் மீது சம்பந்தப்பட்ட வங்கிகளே முடிவெடுக்க ரிசர்வ் வங்கி அதிகாரம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ரிசர்வ் வங்கிக்கு அனைத்து வழிகாட்டு அதிகாரங்களும் , கட்டுப்பாடு அதிகாரங்களும் இருக்கும். நியமனம் மற்றும் நியமனங்களுக்கான ஒப்புதல், வங்கிகளின் வாராக்கடன் தீர்வுகளுக்கு வங்கிகளுக்கு ஆலோசனையைத் தொடர்ந்து அளிக்கும். இந்த மசோதாவை மக்களவையில் பலத்த எதிர்ப்புக்கு இடையே ஜேட்லி தாக்கல் செய்தார்.

திரிணாமூல் எதிர்ப்பு

இந்த மசோதாவுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் சௌகதா ராய் கூறியபோது, இந்த வங்கி விதிமுறைகள் அவசரச் சட்டம் வங்கிகளை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்லும். வங்கிகளின் வாரக்கடன் அளவு ரூ. 9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இவற்றை வசூலிக்கும் அதிகாரத்தை திவால் சட்ட வாரியத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு நோட்டுகளை எண்ண முடியாத நிலையில் ரிசர்வ் வங்கி உள்ளது. வங்கி நிர்வாகங்கள் செயல்படாத பட்சத்தில் பேரியல் பொருளாதாரத்திலிருந்து நுண் பொருளாதார விவகாரங்களுக்கான வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு சில கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் ராய் கூறினார். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்கு குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் ராய் கோரிக்கை வைத்தார்.

ராய் குறிப்பிடும் விவகாரங்களுக்கு பதில் கூறிய ஜேட்லி, வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு தொடர்பில்லாத விவாதம், மசோதா நடைமுறைக்கு வரும்போது இது குறித்து விவாதிக்கலாம் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

மொத்த வாராக்கடனில் சுமார் 25 சதவீதம் வரை 12 வாரக்கடன் கணக்குகளில் உள்ளதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திவால் சட்ட வாரியம் சமீபத்தில் வாரக்கடன் வசூல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எஸ்ஸார் ஸ்டீல், பூஷண் ஸ்டீல், பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவன வாராக்கடன்களை வசூலிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x