Published : 15 Nov 2014 10:29 AM
Last Updated : 15 Nov 2014 10:29 AM

தமிழக உற்பத்தித் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு: தொழில்துறை அமைச்சர் தங்கமணி நம்பிக்கை

தமிழகத்தில் உற்பத்தித் துறையில் அடுத்த 2 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், விற்பனைக்கு பிறகு மோட்டார் வாகனங்களை பழுது பார்ப் பதற்கான புதிய கண்டுபிடிப்பு என்ற தலைப்பிலான மாநாடு மற்றும் பழுது பார்க்கும் கருவிகள் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு மாநாட்டை தொடக்கி வைத்து பேசியதாவது:

இரு சக்கர மோட்டார் வாகன உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கேந்திரமாக சென்னை வளர்ந்து வருகிறது. மோட்டார் வாகன தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தமிழக அரசு மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் கொள்கை 2014 அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கெனவே உலக அளவில் முன்னணியில் உள்ள 20 மோட்டார் வாகன நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் சென்னையில் நிறுவப்பட்டுள்ளன. சென்னையில் நிமிடத்துக்கு ஒரு கார், 75 விநாடி களுக்கு ஒரு வர்த்தக வாகனத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளது.

அரசின் மோட்டார் வாகன கொள்ளை- 2014 மூலம் உலக அளவில் மோட்டார் வாகன தொழில் துறையில் சிறந்து விளங்கும் 5 நகரங்களில் ஒன்றாக சென்னை திகழும். தமிழகத்தில் உள்ள மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்திலேயே உதிரி பாகங்களை வாங்க தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்தின்படி 2020-ல் ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் உலகின் மிகச்சிறந்த மோட்டார் வாகன உற்பத்தி கேந்திரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் உற்பத்தி துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x