Published : 29 Jul 2017 10:53 AM
Last Updated : 29 Jul 2017 10:53 AM

தொழில் ரகசியம்: சரியான யூகங்கள் எப்போது அமையும்?

‘சாயந்திரம் ஆபீஸ்லேருந்து எப்ப வருவீங்க’ என்று கேட்கும் மனைவிக்கு ஆபீஸில் என்ன வேலை, எத்தனை நேரம் ஆகும் என்று ஓரளவேணும் கணித்து பதிலளிக்கிறோம்.

நண்பர்களுடன் கிளப்பில் சரக்கடிக்க அமரும் போது இன்னமும் வந்து சேராத ஒரு நண்பன் பெயரை சொல்லி ‘அவன் இன்னிக்கு வரமாட்டான்னு தோணுது’ என்று சரியாய் கணிக்கிறோம்.

இது போல் தினமும் நம்மை அறியாமல் டஜன் கணக்கான கேள்விகளுக்கு யூகித்து, கணித்து பதில்கள் கூறுகிறோம். இதை மனம் எப்படி செய்கிறது என்று என்றாவது யோசித்து பார்த்திருக்கிறோமா?

ஒருவர் சீரியசாக யோசித்தார். மனித மனம் எப்படி டக்கென்று கணித்து பட்டென்று முடிவுகள் எடுக்கிறது என்பதை அறிய ஆய்வு செய்தார் அமெரிக்காவின் ‘மாசேசூட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில்’அறிவாற்றல் விஞ்ஞானத்’ துறை (Cognitive Science) பேராசிரியர் ‘ஜோஷுவா டெனன்பாம்’. தினம் பல முடிவுகள் எடுக்கிறோம். அதை செய்ய பல விஷயங்களை யூகிக்கிறோம், பல விதங்களில் கணிக்கிறோம். நிகழ்தகவியல் முறையில் சிந்திக்கிறோம் என்கிறார் ஜோஷுவா. இப்படி சிந்திக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை, அவ்வளவே. மனித மனதிற்கு இது எப்படி சாத்தியப்படுகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கினார்.

ஜோஷுவாவின் ஸ்பெஷாலிடி ‘கணக்கீட்டு அறிவாற்றல்’ (Computational Cognition). செய்தியை பிராசஸ் செய்வதில் கம்ப்யூட்டர்களுக்கும் மனித மூளைக்கும் உள்ள ஒற்றுமைகளை ஆராயும் இயல். கம்ப்யூட்டர் பிரமாதமாய் கணிக்கும். ஆனால் அதனிடம் மாலத் தீவு பீச் பெட்டரா, அல்லது மடகாஸ்கர் பீச் பெட்டரா என்று மொட்டையாக கேட்டால் அதுவாக பதில் சொல்ல தெரியாது. ஒப்பிட்டு சொல்ல அதற்கு டேட்டா, ஃபார்முலாக்கள், புரொக்ராம்கள் தேவை. ஆனால் அதே கேள்வியை உங்களிடம் கேட்டால் அந்த இரண்டு பீச்சுகளை முன்னே பின்னே பார்க்காவிட்டாலும் எங்கோ படித்ததை வைத்து, யாரோ கூறியதை கேட்டு பட்டென்று விடையளிப்பீர்கள்.

‘சின்ன விஷயத்தை வைத்துக்கொண்டு சில விஷயங்களில் மனதால் எப்படி யூகித்து, கணித்து முடிவுகள் எடுக்க முடிகிறது’ என்று ‘அறிவியல்’ (Science) ஜர்னலில் கேள்வி எழுப்பினார் ஜோஷுவா. இதற்கு விடை காண தன் சகா ‘தாமஸ் க்ரிஃபித்ஸ்’ஸுடன் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். நூற்றுக்கணக்கான மாணவர்களிடம் நான்கு கேள்விகள் கேட்டார்.

சமீபத்தில் ரிலீசான ஒரு படம் $60 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறது. இப்படம் ஓடி முடிக்கும் போது எத்தனை சம்பாதித்திருக்கும்?

39 வயதுக்காரர் ஒருவரை சந்திக்கிறீர்கள். இன்னும் எத்தனை வருடம் அவர் உயிரோடு இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு கேக் 14 நிமிடங்களாக ஓவனில் இருக்கிறது. இன்னும் எத்தனை நேரத்தில் ரெடியாகும்?

15 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரை சந்திக்கிறீர்கள். இன்னும் எத்தனை வருடம் உறுப்பினராக இருப்பார் என்று கருதுகிறீர்கள்?

இதுவரை வெளியான படங்களின் வருவாய், சராசரி மனிதனின் ஆயுள், கேக் செய்ய தேவையான நேரம், சராசரி உறுப்பினர்களின் பதவிக்காலம் போன்ற டேட்டா கம்ப்யூட்டருக்கு தரப்பட்ட போது அது பவர் லா டிஸ்ட்ரிபூஷன்/ நார்மல், காஸியன் டிஸ்ட்ரிபூஷன் வளைகோடு (Power law distribution, Normal / Gaussian distribution curve, Erlang curve) போன்ற கணித ஃபார்முலா, அணுகுமுறைகள் மூலம் சரியான விடைகளை அளித்தது. ஆனால் மாணவர்களிடம் மேலே கேட்ட கேள்விகள் தவிர வேறு எந்த டேட்டாவும் தரப்படவில்லை. அவர்கள் பார்த்த வரை யூகித்து பதில் கூறுங்கள் என்று மட்டுமே கூறப்பட்டது.

மாணவர்களுக்கு மருத்துவ புள்ளியல் விவரங்களோ, சினிமா பாக்ஸ் ஆபீஸ் தகவல்களோ தெரியாது. இருந்தாலும் அவர்கள் ரொம்ப யோசிக்காமல் தங்களுக்கு சரி என்று மனதில் தோன்றி அளித்த பதில்கள் கம்ப்யூட்டர் கணக்கிட்டு அளித்த பதில்களுடன் 90% மேல் ஒத்துப் போனது!

வாழ்வில் சந்திக்கும் தினசரி நிகழ்வுகள், தெரிந்துகொள்ளும் சிறிய விஷயங்களை மட்டும் வைத்து பெரிய தகவல்கள் இல்லாதிருந்தாலும் மனதிற்குள்ளேயே கணிக்கும் அபார தன்மையை எப்படி பெறுகிறோம் என்பது ஒரு ஆச்சரியமே என்கிறார் ஜோஷுவா. வெவ்வேறு விஷயங்களுக்கு வெவ்வேறு அணுகுமுறை கொண்டு சிந்திக்கவேண்டும் என்று மனித உள்ளுணர்வு எளிதில் புரிந்துகொள்கிறது என்கிறார்.

இதை சரியாய் செய்ய நமக்குத் தேவை சரியான யூகங்கள் என்கிறார். சரியான யூகங்களை எப்படிப் பெறுகிறோம்? வாழ்க்கையில் நாம் சந்திக்கும், கேட்கும், பார்க்கும், அனுபவிக்கும் விஷயங்கள் மூலமே. படங்கள் பார்க்கிறோம், ஒடிய படங்கள், ஓடாத படங்கள், அதன் வருவாய் போன்ற மேட்டர்களை பற்றி யாரோ சொல்ல கேட்கிறோம். இறந்தவர்களை பற்றி கேள்விப்படுகிறோம். எந்த வயதில் எத்தனை பேர் மேலே சென்று செட்டில் ஆனார்கள் என்று தினம் பார்க்கும் மனிதர்கள் கொண்டு, போனவர்களின் வயதைக் கொண்டு அறிகிறோம். பாரளுமன்ற உறுப்பினர்கள் சராசரியாக எத்தனை காலம் பணியாற்றுகிறார்கள் என்பதை பற்றிப் எங்கேயோ படிக்கிறோம். இவற்றைக் கொண்டு யூகிக்கிறோம். பதிலளிக்கிறோம்.

நாம் பல சமயங்களில் ஏன், எப்படி, எதற்கு தவறான முடிவுகள் எடுக்கிறோம் என்பது இப்பொழுது புரிகிறதா? தவறு நம் முடிவுகளில் அல்ல, நம் யூகங்களில். ஒரு விஷயத்தை மனம் தவறாக யூகிக்கும்போது அதைக்கொண்டு எடுக்கும் முடிவுகள் தவறாகிப் போகிறது.

தவறான யூகங்கள் எதனால் ஏற்படுகிறது? சுற்றியிருக்கும் வெற்றிகளை மட்டும் பார்க்கும் போது. மற்றவர்கள் ஜெயித்த கதைகள் மட்டும் படிக்கும் போது. மற்றவர் தோல்விகளை ஒதுக்கிவைத்து அதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருக்கும்போது.

அதனாலேயே வெற்றியை மட்டும் பாராமல் தோல்விகளை பார்த்து பயிலவேண்டும். வெற்றியாளர்கள் அதைத் தான் செய்கிறார்கள். தேடி சென்று தோல்விகளைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். நாடிச்சென்று அதிலிருந்து பாடம் பயில்கிறார்கள். இதை பற்றி விவரமாக விளக்கும் ‘எஞ்சியிருத்தல் சார்புநிலை’ என்ற கோட்பாட்டை பற்றி இப்பகுதியில் முன்பு ஒரு முறை படித்தது சிலருக்கு நினைவிருக்கும்.

வாழ்க்கையோடு, வியாபாரத்திற்கும் இது பொருந்தும். ’சிறந்த தொழிலதிபர்கள் வெற்றி பெற்றவர்களிடம் மட்டும் பேசாமல் தோல்வி அடைந்தவர்களையும் சந்தித்து பேசி அவர்களிடமிருந்து என்ன கற்கமுடியும் என்று ஆராய்கிறார்கள்’ என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ‘டான் மூர்’. சும்மாவேணும் ஒப்புக்கு இவர் சொல்லவில்லை. தொழில்முனைவோர் உளவியல் பற்றி ஆராய்ந்து அதிலிருந்து அறிந்ததை தான் நமக்கு அறிவுறுத்துகிறார்.

தோல்வி என்று மற்றவர் ஒதுக்கியதை தேடிச் சென்று பிடித்து அதிலிருந்து பாடம் பயலவேண்டும். இதை சொல்வது ஈசி, ஆனால் செய்வது கடினம். ஏனெனில் வெற்றியை வேடிக்கை பார்க்கப் பிடிக்கிறது. தோல்விகள் பார்க்கவும் பிடிப்பதில்லை, படித்தாலும் போரடிக்கிறது. மனதிற்கு பிடிக்கமாட்டேன் என்கிறது. போதாதற்கு ஊர்மக்கள் முதல் ஊடகங்கள் வரை வெற்றிக்குத் தான் முக்கியத்துவம் தருகிறார்கள். தோல்விகளுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை.

எடுக்கப்பட்ட முடிவுகள் எதனால் தோல்வியில் முடிந்தன என்று ஆராயுங்கள். அந்த முடிவுகளுக்கு காரணமான யூகங்களை தெரிந்துகொள்ளுங்கள். சரியான முடிவெடுப்பது பெரிய கம்ப சூத்திரமல்ல. கொஞ்சம் பழகவேண்டும். அவ்வளவே. தினம் நீங்கள் யூகிக்கும் விஷயங்களில் எவை சரியாக அமைகிறது, எவை தவறாகிப் போகிறதென்று தொடர்ந்து பாருங்கள். அதிலிருந்து பாடம் பயிலுங்கள். அதனால் எடுக்கும் முடிவுகளும் சரியாய் அமையும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது. ஒரு முறை செய்த தவறை திருத்திக்கொள்ளவும் முடிகிறது. செய்யத் துவங்கிய முதல் நாள் முதல் இதை சரியாய் செய்ய முடியாது. முயற்சி செய்தால் விடியும். முயன்று பயின்றால் முடியும்.

ஒரு பெண்ணை சந்திக்கிறோம். ஒரு யூகத்தின் அடிப்படையில் இவள் நமக்கு ஒத்து வருவாள் என்று காதலிக்கிறோம். காதலித்த பாவத்திற்கு கல்யாணம் செய்துகொள்கிறோம். ஆனால் எல்லா திருமணங்களும் வெற்றி பெறுவதில்லை. பலது பல்லை கடித்துக்கொண்டு இறுதி வரை இழுத்துக்கொண்டு கிடக்கிறது. சிலது விவாகரத்தில் முடிகிறது. ஆனால் விடுகிறோமா? தொடர்ந்து பழகி, அதிலிருந்து பயின்று நம் யூகிக்கும் திறமையை நம்மையறியாமல் வளர்த்துக்கொண்டு மீண்டும் ஒரு நம்பிக்கையில் மறுமணம் செய்துகொள்வதில்லையா. அது போல!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x