

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்தனர். இதில் 5.56 லட்சம் நபர்கள் டெபாசிட் செய்த தொகைக்கும் வருமானத்துக்கும் சம்பந்தம் இல்லை என வருமான வரித்துறை கண்டிபிடித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் முன்னர் தாக்கல் செய்த வருமான விவரத்தோடு பண மதிப்பு நீக்க காலத்தில் அவர்கள் வங்கியில் டெபாசிட் செய்த தொகை சிறிதும் பொருந்தவில்லை. இதனால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிக அதிக அளவிலான பண த்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் 17.92 லட்சம் பேரின் கணக்குகள் முதல் கட்டமாக ஆய்வு செய்யப்பட்டன. இதுதொடர்பாக விளக்கம் கேட்டவுடன் 9.72 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவே விளக்கம் அளித்துவிட்டனர். இதில் 1.04 லட்சம் பேர் தங்களிடம் உள்ள அனைத்து வங்கிக் கணக்கு விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
வருமான வரித்துறை கண்டுபிடித்த நபர்களுக்கு இணையதள முகவரி மற்றும் அவர்களது மொபைலுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விவரம் https://incometaxindiaefiling.gov.in. என்ற இணையதள முகவரியிலும் போடப்பட்டது.
பண மதிப்பு நீக்க காலத்தில் ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க தொகையை வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமான வரி தாக்கல் செய்வோர் தங்களது ரிடர்ன் படிவத்தில் பண மதிப்பு நீக்க காலத்தில் வங்கியில் டெபாசிட் செய்த தொகை குறித்த விவரத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.