Published : 12 Jul 2017 10:49 AM
Last Updated : 12 Jul 2017 10:49 AM

மாநில அரசுகளை முடக்கும் ஜிஎஸ்டி!

ஜிஎஸ்டி-க்கு பின் மாநில அரசியலுக்கான எதிர்காலம் கேள்விக்குறியாக உருவாகியுள்ளது. குறிப்பாக மாநிலங்களின் நிதி அதிகாரம் மொத்தமும் மத்திய அரசு வசம் சென்றுள்ளது. இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்பு (Federal structure) கொண்ட நாட்டில் மாநில அரசுகளின் உரிமைகளில் ஜிஎஸ்டி அமலாக்கம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

இதன் மூலம் தனது முதன்மையான அதிகாரத்தையும், உரிமையையும் மாநில அரசுகள் முழுமையாக மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டன என்பதை பல நிபுணர்களும் சொல்லிவருகின்றனர் என்கிறபோது, மாநிலக் கட்சிகள் ஏன் இதை கண்டு கொள்ளாமல் விட்டன என்கிற கேள்வி எழுகிறது.

மாநில மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு அந்தந்த மாநில அரசுகளுக்கு நிதி தேவையாகும். இதற்கு மாநில அரசின் வரி விதிப்பு அதிகாரம் அவசியமாகும். மாநிலத்தில் மக்களை ஆள தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மக்களுக்கான செயல்திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசின் வரி வேண்டும். இது இயல்பான மக்களாட்சி மற்றும் அரசியலமைப்பு முறையாகும். இந்த விஷயத்தில் மாநில உரிமையை விட்டுக்கொடுத்தல் என்பது பெரும் தவறாகும். அரசியல் கட்சிகள் மக்களுக்காக தெரிவித்த செயல்திட்ட அறிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில், மக்கள் இக்கட்சிகளை தேர்ந்தெடுப்பது என்பது கேலிக்கூத்தாக அமையும். மாநில அரசியல் கட்சிகள், தங்கள் `கடை’களை மூடிவிட்டு வேறு வேலை செய்ய வேண்டியது தான்.

பல நாடுகளில் வெற்றிகரமாக ஜிஎஸ்டி-யை அமல்படுத்தியுள்ளார்களே, இந்தியாவில் ஏன் முடியாது? என்று சில நண்பர்கள் கேட்டனர். உண்மையில் இது தவறான வாதமாகும். ஐக்கிய அமெரிக்கா (The United States of America) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) தான் உலகின் இரு பெரிய சந்தை. இவ்விரு ஒன்றியங்களிலுமே ஜிஎஸ்டி (சரக்குகள் மற்றும் சேவைக்கான வரி) இல்லை. அமெரிக்காவில் உள்ள மாகாணங்களும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளும் தங்கள் அதிகாரங்களையும் உரிமையும் ``ஒரே வரி” என்கிற அமைப்பில் சரணடைவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.

தற்போதுள்ள மாநில - மத்திய அமைப்பில், பெரும்பான்மையான நிர்வாகம் என்பது மாநிலத்தில் இருந்து தான் செயல்படுகிறது. ஜிஎஸ்டி க்கு பின்னர், மாநில அரசு தனது முதன்மையான அதிகாரத்தையும், தனது நிர்வாகம் அமைப்பையும் இழக்கிறது. மத்திய அரசின் கூலியாக மாநில அரசுகள் இருக்கப் போகின்றன.

ஒரு மாநிலம் முதலீட்டாளர்களையும் வணிகத்தையும் பெருக்க வேண்டும் எனில், முதலமைச்சருக்கான வரி ஊக்க முறைகள் அவசியமானது. இந்த ஒரே வரி, ஒரே நாடு என்பதன் மூலம், மாநிலங்கள் போட்டியிட முடியாது. ஒரு மாநில முதலமைச்சர் தனது மாநிலத்துக்கு முதலீடுகளை திரட்ட தன்னிச்சையாக நிறுவனங்களுக்கு சலுகை அளிக்க முடியாது. இது மாநிலங்களுக்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கும் பாதகமாக அமையும். இப்படி ஒட்டுமொத்தமாக மாநில உரிமைகள் ஜிஎஸ்டி-யிடம் இழந்த பிறகு, மாநில அரசியல் இருட்டடிக்கப்பட்டு விட்டது என்று எப்படி சொல்லாமல் இருப்பது?

மாநிலங்களுக்கு ஊக்கம் இருக்காது

ஜிஎஸ்டி-யால் மாநிலங்களின் செயல்திறனை ஊக்குவிக்க முடியாது என்பதே உண்மை. மேலும் நன்றாக செயல்படும் மாநிலங்களுக்கு இதனால் பாதிப்புகளே அதிகம். ஜிஎஸ்டி சேரும் இடம் சார்ந்த வரியாகும். அதாவது, இந்த வரி நுகர்வோர் இடத்தில் பெறும் வரியாகும், தயாரிப்பு இடத்தில் பெறும் வரியல்ல. இந்தியாவில் உள்ள முதன்மையான தயாரிப்பு மாநிலங்களில், தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது, மாநில ஜிடிபியில் தயாரிப்பு வர்த்தகம் 13.39 லட்சம் கோடி டாலர்களை கொண்டுள்ளது. 21% விவசாயத்திலிருந்தும், 34% தொழிற்சாலைகளிலிருந்தும், 45% சேவைகளிலிருந்து இது பெறப்படுகிறது.

ஜிஎஸ்டி- யினால் நஷ்டமடையும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு செய்யப்படும் எனக் கூறினாலும், அதன்பின் தமிழ்நாடு தான் உற்பத்தி செய்வதை விட அதிகமாக இழக்கும். குறிப்பாக நன்றாக செயல்படும் மாநிலங்களுக்கு என்று எந்த ஊக்கமும் இல்லை.

செலவின் மீது விதிக்கப்படும் வரி

ஜிஎஸ்டி என்பது, மக்களின் செலவின் மீது விதிக்கப்படும் வரியாகும், அதாவது அனைவரின் மீதும் வரி திணிக்கப்படுகிறது, இந்தியா வசதியான நாடு கிடையாது. ஏழைகளை அதிகமாகக் கொண்ட நாடு, இதன் மூலம் அனைத்து மக்களிடமிருந்து மறைமுகமாக வரி பெறப்படுகிறது, அதாவது வசதியில்லாத அனைத்து மக்களிடமும் அவர்களின் அத்தியாவதிய உணவு பொருள்கள் மீதும் வரி வசூலிக்கப்படுகிறது, அமெரிக்கா போன்ற நாடுகள் நேரடியான வரிகளை சார்ந்து இயங்குகிறது. அதாவது வருமான வரியை வசதியாக உள்ள மக்களிடம் இருந்து பெறுகிறது. அதுதான் சரியான பங்களிப்பு. இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, சில மாநிலங்களில் விற்பனை வரிகள் இருக்கிறது. அவர்களின் முதன்மையான வரி அமைப்பு என்பது நேரடியான வரி அமைப்பாகும். ஆனால் இந்த ஜிஎஸ்டி வரியின் மூலம், அனைத்து வசதியற்ற மக்களிடம் இருந்தும் மறைமுகமாக வரி வசூலிக்கிறது.

ஜிஎஸ்டி குழு

ஜிஎஸ்டி குழுவில் ஒரு தீர்மானத்தை அமல்படுத்த அனைத்து மாநிலங்களின் ஒப்புதல் வேண்டும் என்கிறது. ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த திருத்தத்தையும் செயல்படுத்த முடியாது. அதற்கேற்பவே விதிமுறைகள் உள்ளன. இது மோசமான நிலையாகும். ஜிஎஸ்டி குழு என்கிற பெயரில் ஒரு புது அரசியலமைப்பு குழு உருவாகியுள்ளது, அது முழுக்க தன் மக்களுக்கு எதிராக உள்ள அரசியலமைப்பு குழுவாகும்.

ஒரு வரி, ஒரு தேசம், ஒரு சந்தை.

உண்மையாகவே நமக்கு அப்படி ஒரு சந்தை வேண்டுமா? இந்த ஒரு சந்தை என்கிற முறையில் யார் பயனடையப் போகிறார்கள்? பன்னாட்டு நிறுவனங்களா அல்லது பெரும் நிறுவனங்களா அல்லது சிறு- நடுத்தர தொழில் முனைவோர்களா? இதற்கான விடை தெரிந்ததே, சிறு- நடுத்தர தொழில் முனைவோர் அழிந்து பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதல் நிறுவனங்கள் மட்டுமே பயனாளர்களாக இருக்கப் போகிறார்கள்.

சீனாவை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியாவில் சிறு- நடுத்தர தொழில் முனைவு முன்னிலை வகிக்கிறது. காரணம் லட்சக்கணக்கான தொழில்முனைவகங்கள். இவை தனிப்பட்ட சிறு தொழில்முனைவோர்களால் நடத்தப்படுகின்றன. ஒரே சந்தை என்பது, லட்சக்கணக்கான சிறு தொழில்முனைவதற்கான வாய்ப்பை முழுமையாக அழித்து விடும். ஒரு சந்தை என்கிற இந்த திட்டம் பன்னாட்டு மற்றும் பெரு நிறுவனங்களுக்காகவே அமைத்த திட்டம் என வெளிப்படையாக தெரிகிறது. மிகப்பெரிதான அனைத்தும் இயல்பாகவே உடையும் தன்மையுடையதாகும். அதுபோலத்தான் ஜிஎஸ்டி தோல்வி அடையும் போது, இதன் பாதிப்பு மீளமுடியாத அளவு பெரும் பாதிப்புக்குள்ளானதாகும். தற்போதுள்ள உடையாத அமைப்பிலிருந்து, உடையும் சந்தை அமைப்பிற்கு மாறுகிறோம். ஜிஎஸ்டி-யில் நல்ல விசயங்களே இல்லையா என கேட்கலாம். அவை தேசிய மற்றும் மாநில பத்திரிகைகள் என அனைத்திலும் முழுப்பக்க விளம்பரமாக வந்த வண்ணம் உள்ளன. அதனை படித்தால் போதும்.

சுரேஷ் சம்பந்தம்

(கட்டுரையாளர் ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x