

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஆறு நாடுகளில் வங்கிக் கணக்குகள், சொத்துகள் மற்றும் போலி நிறுவனங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் அமெரிக்காவில் பல சொத்துகள் உள்ளன. அமெரிக்காவில் பல நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார். வங்கி மோசடி பணத்தை விஜய் மல்லையா இந்த நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளார் என்றும் கூறியுள்ளது.
இந்த சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள், போலி நிறுவனங்கள் தொடர்பாக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், சிங்கப்பூர், ஐயர்லாந்து, மொரீஷியஸ் ஆகிய ஆறு நாடுகளின் உதவியையும் மத்திய அமலாக்கத்துறை கேட்க உள்ளது. இந்த ஆறு நாடுகளுக்கும் கடிதம் எழுத சிறப்பு நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை மனு அளித்திருந்தது. இதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மல்லையாவின் வங்கிக் கடன் மோசடிகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கூறிய அமலாக்கத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை விஜய் மல்லையா தனது சொந்த உபயோகத்துக்கும், பல சொத்துகளை இந்தியாவுக்கு வெளியிலும் கொண்டு சென்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
மோசடி செய்த பணத்தில் இந்தியாவுக்கு வெளியே பல சொத்துகளை வாங்கியுள்ளார். மல்லையாவின் பல்வேறு சொத்துகள் குறித்து புலனாய்வு செய்த அமலாக்கத்துறை ஆறு மனுக்களை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. மல்லையாவின் வங்கிக் கணக்குகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து மேலும் நான்கு நாடுகளுக்கு மேற்கொண்ட பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கவும் அமலாக்கத்துறையின் முயற்று வருகிறது. மல்லையா மற்றும் கிங்பிஷர் நிறுவன அதிகாரிகள் மீது ஜூன்14ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இவர்களின் மோசடிகள் குறித்த விரிவான அறிக்கையை வழக்கு விசாரணையில் அளிக்க உள்ளது. கிங்பிஷர் தொடங்கப்பட்டதில் இருந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறது. 2008-ம் ஆண்டு ரூ.687 கோடி நஷ்டமும், 2009-ம் ஆண்டு 2,168 கோடியாக நஷ்டம் அதிகரித்திருந்தது.