

அக்டோபர் மாத ஏற்றுமதி 5.04 சதவீதம் சரிந்து 2,607 கோடி டாலராக இருக்கிறது. பெட்ரோலியம், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஜினீயரிங் பொருட்கள் மற்றும் இரும்புத் தாது ஏற்றுமதி சரிந்ததால் கடந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி சரிந்தது.
அதேசமயம் இறக்குமதி 3.16 சதவீதம் அதிகரித்து 3,945 கோடி டாலராக இருக்கிறது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்தால் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தது. ஆனால் அதே சமயம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது வர்த்தகப்பற்றாக்குறை சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் 1,425 கோடி டாலராக இருந்தது வர்த்தக்கப் பற்றாக்குறை.
கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,059 கோடி டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை இப்போது 1,330 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது.
இன்ஜினீயரிங் பொருட்களின் ஏற்றுமதி இந்திய ஏற்றுமதியில் கணிசமாக பங்கு வகிக்கும். ஆனால் இந்த ஏற்றுமதி 9.18 சதவீதம் சரிந்து அக்டோபர் மாதத்தில் 520 கோடி டாலராக இருந்தது. அதே போல எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதியும் 30.36 சதவீதம் சரிந்து 49.5 கோடி டாலராக இருக்கிறது. மந்தமான ஐரோப்பிய சந்தையும் இதற்கு ஒரு காரணமாகும்.
இறக்குமதியில் எண்ணெய் பொருட்களின் இறக்குமதி 19.2 சதவீதம் சரிந்து 1,236 கோடி டாலராக அக்டோபர் மாதத்தில் இருக்கிறது. ஆனால் எண்ணெய் இல்லாத பொருட்களின் இறக்குமதி 18.9 சதவீதம் அதிகரித்து 2,708 கோடி டாலராக இருக்கிறது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 18,979 கோடி டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இது 4.7 சதவீதம் அதிகமாகும். அதேபோல இறக்குமதி 27,355 கோடி டாலராக இருக்கிறது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் வர்த்தகப்பற்றாக்குறை 8,375 கோடி டாலரும். இது கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் (8,731 கோடி டாலர்) போது சிறிதளவு குறைவாகும்.