

ஜூன் மாத நுகர்வோர் விலைக் குறியீடு குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 1.54 சதவீதமாக நுகர்வோர் விலை குறியீடு தணிந்துள்ளது. சில்லரை பணவீக்க புள்ளிவிவரங்களை வெளியிடத் தொடங்கிய 2012-ம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை இல்லாத வகையில் நுகர்வோர் விலைக் குறியீடு குறைந்துள்ளது.
மத்திய புள்ளியியல் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி இது தெரிய வந்துள்ளது. ஜூன் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் நுகர்வோர் விலைக் குறியீடும் சரிந்துள்ளது. முன்னதாக ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்க குறியீடு 1.70 சதவீதமாக இருக்கும் என ராய்ட்டர்ஸின் கருத்து கணிப்பில் பொருளாதார அறிஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மே மாதத்தின் ஆண்டு நுகர்வோர் விலை குறியீடு 2.18 சதவீதமாக இருந்தது. சில்லரை உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.12 சதவீதம் குறைந்துள்ளது. மே மாதத்துடன் ஒப்பிட்டால் 1.05 சதவீதம் குறைந்துள்ளது.
மக்கள் ஆடைகளுக்காக செலவிடும் விகிதம் 4.17 சதவீதமாகவும், எரிபொருளுக்கான செலவு விகிதம் 4.54 சதவீதமாகவும் இருந்தது. காய்கறிகள் மற்றும் தானியங்களின் விலை 16 சதவீதம் வரை ஜுன் மாதத்தில் சரிந்துள்ளது.
நுகர்வோர் விலை குறியீடு கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிந்துள்ளதால் வட்டி விகிதங்களை குறைப்பதற்கான நெருக்குதல் ரிசர்வ் வங்கிக்கு உருவாகியுள்ளது என்று தொழில்துறையினர் கூறுகின்றனர். கடந்த மாதத்திலேயே ஆர்பிஐ வட்டி விகிதங்களை குறைக்கவில்லை. இந்த நிலையில் உணவு பொருட்களின் விலை குறைந்துள்ளதால் அடுத்த மாதத்தில் நடைபெற உள்ள நிதிக் கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ இந்த சூழலை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்று சந்தை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொழில்துறை வளர்ச்சியை பொறுத்தவரையில் மே மாதம் மந்தமாக இருந்தது. தொழில்துறை நடவடிக்கைகள் குறைவாக இருந்ததால் இதன் குறியீடு 1.7 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறியீடு 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சுரங்கம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் மந்தமான செயல்பாடு காரணமாக தொழில் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாகவும் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
உற்பத்தி துறை கடந்த ஆண்டு இதே காலத்தில் 8.6% வளர்ச்சி அடைந்தது. தற்போது 1.2 சதவீதமாக இருக்கிறது. தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க மத்திய அரசு வட்டி குறைப்பு தேவை என தொடர்ந்து வலியுறுத்த்தி வருகிறது. தொழில்துறையினரும் வட்டி குறைப்பு தேவை என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.